சிபிஐயில் பனிப்போர் தீவிரம் அடைந்த நிலையில் சிபிஐ இயக்குராக இருந்த அலோக் வர்மா, இணை இயக்குநராக இருந்த அஸ்தானாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. ரஃபேல் போர் விமானம் தொடர்பான விசாரணையில் தீவிரம் காட்டியதால்தான் அலோக் வர்மா மீது நடவடிக்கை என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் மத்திய பா.ஜனதா அரசு அதனை நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் ரஃபேல் போர் விமான ஆவணங்களை கேட்டதால்தான் அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

ராஜஸ்தானில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் சிக்கிய மெகுல் சோக்‌ஷி அருண் ஜெட்லியின் மகளுக்கு பணம் வழங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டை மீண்டும் வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய காரணத்திற்காக சிபிஐயின் இயக்குநர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்,” என்று குற்றம் சாட்டினார். அலோக் வர்மா ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஆவணங்களை மத்திய அரசிடம்  கேட்டுள்ளார். இதனால்தான் அவர் நீக்கப்பட்டுள்ளார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.