கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்ப்பட்ட இடத்தில் ஓரமாக ஒதுங்கிச் சென்று அமர்ந்திருந்த அழகிரியையும், முன்வரிசையில் அமர்ந்து கண் கலங்கிக் கொண்டிருந்த ஸ்டாலினையும் அருகருகே அமர வைத்து உறவினர்களை நெகிழச் செய்தார் கனிமொழி.  கலைஞர் உடல் ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்ட உடன் மூத்த மகனான அழகிரி அங்கிருந்து கார் மூலம் உடல் அடக்கம் நடைபெறும் அண்ணா சதுக்கத்திற்கு வருகை தந்தார். வந்தவர் நேராக 4வது வரிசையில் சென்று ஒரு சேரில் அமைதியாக அமர்ந்து கொண்டார். கனிமொழி, ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய கலைஞரின் வாரிசுகள் கலைஞர் உடல் சுமந்து செல்லப்பட்ட ராணுவ வாகனத்துடன் நடந்தே அடக்கம் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

உடல் அடக்கம் செய்யும் இடத்தின் முன்வரிசையில் ஸ்டாலின், கலைஞரின் மூத்த மகள் செல்வி, இளைய மகள் கனிமொழி மற்றும் மற்றொரு மகன் தமிழரசு ஆகியோர் அமர்ந்திருந்தனர். அப்போது அனைவரும் சோகத்தில் அமர்ந்திருக்க கனிமொழி மட்டும் அழகிரியை தேடினார். அவர் எவ்வளவு தேடியும் அழகிரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கனிமொழி தனது கணவரை அழைத்து அழகிரி அண்ணனை எங்கே என்றார்? அவரும் பதற்றத்துடன் தேடிய நிலையில் 4வது வரிசையில் ஒருஓரமாக அழகிரி அமர்ந்திருப்பதை கனிமொழியிடம் காட்டினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கனிமொழி, அழகிரி பின்னால் அமர்ந்திருக்கும் தகவலை ஸ்டாலினிடம் கூறியுள்ளார். மேலும் அழகிரியை முன்வரிசைக்கு அழைத்து வரட்டுமா? என்றும் கனிமொழி கேட்டுள்ளார். அதற்கு உடனே அழைத்து வருமாறு ஸ்டாலின் கூறியுள்ளார். பின்னர் கனிமொழி அங்கிருந்து சென்று அழகிரியை முன்வரிசைக்கு வருமாறு கூற, அவரும் கனத்த இதயத்துடன் அங்கிருந்து எழுந்து முன்வரிசைக்கு வந்தார்.

அழகிரியும் – ஸ்டாலினும் அருகருகே அமர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு வந்த செல்வியை தன் அருகே ஸ்டாலின் அமர வைத்தார். இதனால் ஸ்டாலின் அவருக்கு அருகே செல்வி அவருக்கு அருகே அழகிரி அமர்ந்திருந்தனர். அடுத்ததாக தமிழரசுவும், கனிமொழியும் அமர்ந்தனர். அவ்வளவு கூட்டத்திலும் அழகிரியை தேடிப்பிடித்து முதல் வரிசைக்கு அழைத்து வந்த கனிமொழியின் செயலால் அவரது உறவினர்கள் நெகிழ்ந்து போயினர்.மேலும் கலைஞர் உடல் நல்லடக்கம் செய்யப்படும் போது ஸ்டாலின் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். ஸ்டாலினுக்கு அவரது மனைவி மகன், மகள்களால் கூட ஆறுதல் கூற முடியவில்லை. ஆனால் அருகே இருந்த கனிமொழி தான் அவ்வப்போது ஸ்டாலின் கரங்களை பற்றி அழாதீர்கள் அழாதீர்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்.