ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவ்ர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 27 மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்துள்ளதால், இங்கே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் கடைகள் இங்கே திறக்க அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில் டாஸ்மாக் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், “குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ளவேண்டும்” என்று கமல் தெரிவித்துள்ளார்.
