ஸ்டாலினுக்கு எதிராக கூட்டத்தை கூட்டி கெத்து காட்டலாம் என்று களம் இறங்கிய துரை தயாநிதி எதிர்பார்த்த ஆதரவு இல்லாத காரணத்தினால் கைகளை பிசைந்து கொண்டிருக்கிறார். கலைஞர் மறைவை தொடர்ந்து தி.மு.கவில் மறுபடியும் கோலோச்ச வேண்டும் என்கிற அழகிரியின் முடிவுக்கு துவக்கம் முதலே முட்டுக் கட்டை போட்டு வருகிறார் ஸ்டாலின். இதனால் தனக்கு இல்லை என்றாலும் தனது மகனுக்காகவதுகட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்று அழகிரி கோர ஆரம்பித்தார். 

ஆனால் அழகிரி தொடர்புடைய யாருக்கும் கட்சியில் மீண்டும் இடம் இல்லை என்பதை ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் அழகிரி கலைஞர் நினைவிடத்திற்கு சென்று கலகத்தை ஆரம்பித்தார். ஆனால் அழகிரிக்கு பின்னால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு ஆதரவாளர்கள் வரவில்லை. மேலும் அதுநாள் வரை அழகிரிக்கு ஆதரவாக ஸ்டாலினிடம் பேசி வந்த அவரது சகோதரி செல்வியும் தனது முயற்சியை கைவிட்டுவிட்டார். ஸ்டாலினும் அழகிரி தொடர்பாக தன்னிடம் யாரும் எதுவும் பேசக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அழகிரி தரப்பு ஸ்டாலினுக்கு கவுண்ட்டர் கொடுக்கும் வகையில் கூட்டத்தை கூட்டி கலைஞர் நினைவிடத்தில் அணிவகுக்கும் திட்டத்தை கையில் எடுத்தது. அழகிரியின் ஆதரவாளர் இசக்கி முத்து அதற்கான ஏற்பாடுகளை துவங்கினார். துரை தயாநிதி மூலமாக முன்பு அழகிரி ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் அழகிரி மகன் பேசுகிறார் என்று தெரிந்ததும் பலரும் பேசவே தயங்கியுள்ளனர். மேலும் சிலரோ தங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். துவக்க காலத்தில் அழகிரியால் அதிக அளவில் பலன் அடைந்தவர்கள் கூட துரை தயாநிதியிடம் பேசவே தயங்குகின்றனர். 

நிர்வாகிகள் தான் இப்படி என்றால் உடன்பிறப்புகளான தொண்டர்களை அணுகலாம் என்றால், அழகிரி பணம் செலவழிக்கமாட்டாரே? என்று அவர்களும் யோசிக்கின்றனராம். இதனால் தொண்டர்களை திரட்டி கலைஞர் நினைவிடத்தில் திரளும் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று துரை தயாநிதி அடுத்த யோசனைக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. முதற்கட்டமாக மதுரையில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தங்கள் பலத்தை கட்சியின் நிர்வாகிகளிடமாவது நிருபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கருதும் துரை தயாநிதி அதற்கான பணிகளை தந்தையின் உதவியுடன் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் ஸ்டாலினுக்கு குடைசல் கொடுக்கும் தங்கள் பணி மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கிறது அழகிரி தரப்பு.