பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மதுரையில் மு.க அழகிரி தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு கலைஞர் மறைந்த 30வது நாளில் தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்க மு.க அழகிரி சென்னையில் தனது ஆதரவாளர்களின் பேரணிக்கு ஏற்பாடு செய்தார். திமுக மு.க ஸ்டாலின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடக்கூடாது என்கிற திட்டத்தின் அடிப்படையில் அழகிரி இந்த பேரணியை நடத்தினார். சுமார் ஒரு லட்சம் பேரை திரட்டி திமுகவின் முக்கிய நிர்வாகிகளை தன்பக்கம் இழுப்பதுதான் அன்று அழகிரியின் திட்டமாக இருந்தது. ஆனால் அழகிரியின் அந்த பேரணி எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதில் வெரும் 10 ஆயிரம் பேர் கூட பலந்துகொள்ளவில்லை. அதன்பிறகு அழகிரி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். திமுக முழுவதுமாக மு.க ஸ்டாலின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் மு.க அழகிரி மறுபடியும் அரசியல் களத்திற்கு  வருகை தந்துள்ளார்.

இந்த முறை மதுரையில் தனது ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் போட்டுள்ளார் அழகிரி. பெருமளவில் ஆதரவாளர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லாமல்தான் ஒரு கல்யாண மண்டபத்தில் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அழகிரி செய்திருந்தார். ஆனால் எதிர்பார்க்காத அளவிற்கு மதுரையில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். ஒட்டுமொத்த தென் மண்டலங்களில் இருந்தும் ஏராளமானோர் மதுரைக்கு வந்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள திமுகவினரையும், அழகிரி நடத்திய கூட்டத்தில் பார்க்க முடிந்தது. அப்போது பேசிய அவர், திருமங்கலத்தில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்து காட்டியது மாதிரியே திருச்செந்தூர் தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணன் ஐம்பதாயிரம் வாக்குகள் பெற்று ஜெயிப்பார் என்று சொன்னேன். அதே மாதிரி 54 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். என்னைப் புகழ்ந்து பொதுக்குழுவின் போது பொதுக்குழுவே வருக என போஸ்டர் அடித்தார்கள். அவர்களை உடனே கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள். 

ஆனால் ஸ்டாலினுக்கு மட்டும் போஸ்டர் அடிக்கலாமா.? வருங்கால முதல்வர் என்று மொத்தமாக போஸ்டர் அடித்து வைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின், அப்பப்போ அதை ஓட்டுறாங்க, அது முடியாது.  நான் முதல்வர் ஆவேனென்று சொல்லல, ஆனா நீ வர முடியாது.. என் ஆட்கள், ஆதரவாளர்கள் உன்னை நிச்சயமாக வர விடமாட்டார்கள் என்று ஸ்டாலினுக்கு எதிராக ஆவேசம் கட்டினார். நான், எனது மனைவி, மகன் மூவரும் திமுக தலைவர் கலைஞரை சந்தித்து, என்னை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளமாட்டீர்களா அப்பா என கேட்டோம். அப்போது அவர் இவங்க ஆட்டமெல்லாம் அடங்கட்டும் அப்புறம் கட்சியில் சேர்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார். ஆனால் அதற்குள் அவர் போய் சேர்ந்து விட்டார். 7 வருஷமா சும்மாவே இருந்தோம். இப்பவும் சும்மா தான் இருக்கிறோம். விரைவில் ஒரு முடிவு எடுப்பேன். நல்ல முடிவாக இருந்தாலும், கெட்ட முடிவாக இருந்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த முடிவு எடுத்தாலும் நீங்கள் என்னுடன் தானே நிற்பீர்கள் என்று கூட்டத்தில் அவர் கேள்வி எழுப்பினார். அப்போது அவருக்கு ஆதரவாக குரல் எழும்பியது. 

இதுவரை எத்தனையோ பேரை நான் மந்திரியாக்கி இருக்கிறேன், ஆனால் எவனுக்கும் நன்றி கிடையாது. எல்லோரும் கோடீஸ்வரன் ஆகிட்டான். அதேபோல், நான் எந்த முடிவு எடுத்தாலும் நீங்கள் அனைவரும் என்னுடன் தானே இருப்பீர்கள் என்று அழகிரி கேட்க, அதற்கு ஆதரவாக ஆரங்கத்தில் பலத்த குரல் எழுப்பியது. முன்னதாக அழகிரி பேசியபோது கூட்டத்தில் திடீரென சலசலப்பு ஏற்பட்டது. உடனே அழகிரி எதிர் பக்கம் பார்த்து, ' கேமரா உட்காருப் பா' என்றார் மண்டை கிளார் அடிக்குதாம் என்று அவர் சிரித்துக்கொண்டே சொல்ல, மொத்த அரங்கமும் அழகிரியின் எதார்த்த பேச்சைக்கேட்டு அதிர்ந்தது. இந்த கூட்டத்தில் மு.க அழகிரி எந்த குறிப்பு சீட்டும் இன்றி தனது எதார்த்தமான பாணியில் பேசியது அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரங்கில் திரண்டிருந்தவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இறுதியாக பேசிய அவர், சிலர் ஸ்டாலினைப் பார்த்து சொல்கிறார்கள் பேச்சில் கலைஞரையே மிஞ்சி விட்டாய் என்று, இந்த நாட்டில் கலைஞரின் அறிவு யாருக்கு வரும்? ஏன் இந்த இந்தியாவிலேயே அவரைப்போல் யார் இருக்கிறார்கள் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக ஆவேசமாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இப்படியாக கூட்டம் நிறைவுற்றது.