தமிழகத்தில் வலுவாக காலூன்ற இதுவரை ரஜினியை சுற்றி வந்த பாஜக, அவரை ஒதுக்கி விட்டு அஜித் பெயரை பயன்படுத்த தொடங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் அனல் கிளப்பி வருகிறது. 

விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் ரஜினியின் ஆதரவை எதிர் நோக்கி வந்த பாஜக, விஸ்வாசம் தந்த அதிரடி வெற்றியால் அஜித் ரசிகர்களை நாட ஆரம்பித்துள்ளது. ஜெயலலிதா அஜித் மீது மிகுந்த நேசம் வைத்திருந்தார். அஜித்- ஷாலினி திருமணத்திற்கு சென்ற ஜெயலலிதா வெகுநேரம் அங்கு இருந்து வாழ்த்தி விட்டு சென்றார். இதனால் அதிமுகவினர் அஜித்தை தங்கள் வீட்டு பிள்ளையாக கருத ஆரம்பித்தனர். 

ரஜினி ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாக அறிவித்த போதே அவர் பாஜகவுக்கு ஆதரவானவர் என கூறப்பட்டது. அவர்கள் நடித்த பேட்ட, விஸ்வாசம் படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோத, அது அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இதுவரை ரஜினியை நம்பி வந்த பாஜக இப்போது அஜித்தை பயன்படுத்த தொடங்கி இருக்கிறது.     

திருப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணையும் விழாவில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் மக்களிடம் கொண்டு செல்வார்கள் என்றும், அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

வரும் மக்களவை தேர்தலில் இதுவரை பாஜகவுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்க முன்வரவில்லை. பாஜகவின் ஒரே நம்பிக்கையாக இருந்த அதிமுகவும் பாஜக கூட்டணியில் சேராது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் பாஜகவின் ஒரே நம்பிக்கையாக இருந்த ரஜினியும் பாஜகவுக்கு பிடிகொடுக்காமல் நழுவி வருவதால் அஜித்தையும் அவரது ரசிகர்களையும் பயன்படுத்தி கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். 

’இனி மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும்’’ என கேட்டுக் கொண்டுள்ளார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை. தனது ரசிகர் மன்றங்களை களைத்து விட்ட அஜித் பாஜக விரிக்கும் வலைக்கு எதிர்வினை ஆற்றுவாரா? இல்லை எப்போதும் போல மவுனம் காப்பாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.