1972 அக்டோபர் 17 - தமிழ் மக்களின் நாயகன் எம் ஜி ஆர்., தனது தலைவரின் பெயரைத் தாங்கிய, புதிய கட்சி தொடங்கினார். அப்போது முதல், 2020 அக்டோபர் 17 வரை, தொடர்ந்து 48 ஆண்டுகளாக, தமிழக அரசியலின் தலைமை இடத்தை விடாது தக்க வைத்துக் கொண்டுள்ளது அதிமுக. 
 
வெவ்வேறு காரணங்களால், ஒரு சில தேர்தல்களில் தோல்வியை சந்தித்து இருக்கலாம்; ஆனாலும், தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு, அவர்களின் நம்பிக்கைக்கு உரிய கட்சியாக அதிமுக இருந்து வருகிறது. எம் ஜி ஆர்., ஜெயலலிதா என்று இரு பெரும் ஆளுமைகள், அதிமுகவை பாமரர்களின் இயக்கமாகப் பாதுகாத்தனர். வறியவர்கள், தாம் வஞ்சிக்கப்படும் போதெல்லாம், நியாயம் கேட்டு, புகலிடம் நாடி வருகிற இடம், அநேகமாக அதிமுக தலைமை அலுவலகமாகத்தான் இருக்கும்.
 
தேர்தல்களில் எப்படியேனும் ஓட்டு வாங்கிப் பதவிக்கு வருகிற, ஏனைய அரசியல் கட்சியாக அதிமுகவை மக்கள் பார்ப்பது இல்லை. எந்தக் காலத்திலும் தமது உரிமைகள், நலன்கள் பாதுகாக்கப்படும் என்கிற நன்னம்பிக்கை தருகிற, தமக்கான அமைப்பாகத்தான் அதிமுகவை சாமான்யர்கள் கருதுகிறார்கள்.
 
அதனால்தான், தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு வருகிற ‘பருவ கால’கட்சி அலுவலகமாக அதிமுக தலைமை அலுவலகம் இருப்பது இல்லை. நாள்தோறும் நூற்றுக் கணக்கில் மிக சாதாரணம் ஆனவர்கள், மனுக்களுடன் இங்கு வந்து, குறைகளை சொல்லிச் செல்கிறார்கள். தமது பிரசினைகள் தீர்க்கப்பட்டு விடும் என்கிற நம்பிக்கையை, அதிமுகவால் தர முடிந்ததே.. அது எப்படி..? மக்கள் தலைவர்களாக, எம் ஜி ஆர்., ஜெயலலிதா - இருவருக்கும் பொதுவான ஓர் அம்சம் உண்டு. அதுதான் சாமான்யர்களின் ஆதரவு. அதற்குக் காரணம், இரு தலைவர்களுமே, அடித்தட்டு மக்களை அரண் போல் காத்தார்கள். யாருக்கு எதிராகவும், சாதி, சமய, மொழி, இன வேறுபாடுகள் எந்த நிலையிலும் தலை தூக்காத படி, கவனமாகக் கையாண்டார்கள்.
 
இந்த பொதுவான அணுகுமுறை, எல்லாரையும் அவர்கள் பால் ஈர்த்தது. இன்றைக்கும், அனைவருக்கும் பொதுவான, எல்லாரையும் ஒன்றாகப் பாவிக்கிற, அரசியல் இயக்கம் - அதிமுக என்பதில் தமிழ் மக்களுக்கு, அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. இதுதான் இந்தக் கட்சியின் ஆகப் பெரிய வலிமை. அடித்தட்டு மக்கள் - அதிமுக பிணைப்புக்கு இன்னொரு காரணமும் உண்டு. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவருக்கு எதிராகவும் எத்தனையோ விமர்சனங்களை வைக்கலாம்; ஆனாலும், அவர்களது ஆட்சியில், சிறு துரும்பு அளவுக்கும், சாமான்யர்கள் மீது சுமை விழாத வண்ணம் திட்டங்கள் அமைத்தனர்.
 
மிகச் சாதாரண நிலையில் இருக்கும் ஒருவரின் அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடாத வகையில், இயலுமானால், அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கிற விதத்தில், அரசின் கொள்கைகள், திட்டங்கள், நிலைப்பாடுகள் வகுக்கப் பட்டன. அரசின் பொது விநியோகம் (’ரேஷன்’) மூலம் பொதுமக்களுக்குக் கிடைத்த பயன்கள், சிறிய ஊர்களுக்கும் கூட வந்து சென்ற ‘டவுன் பஸ்’ ஏற்பாடு, பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், அம்மா உணவகம் போன்ற பல்வேறு திட்டங்கள், நேரடியாக சாமான்யர்களுக்கு பெரும் பயன் தந்தன. 

‘பெரிய இடத்து’ பரிவர்த்தனைகளில் என்ன நடந்தது என்று அறுதியிட்டு கூற முடியாது; ஆனால் கீழ் மட்டத்தில், யாருக்கும் எள்ளளவும் பாதிப்பு இல்லாமல் சுமுகமான ஆட்சியை அதிமுக தந்தது; தருகிறது; தரும். இந்த உத்தரவாதம், யாரும் தராமல் தானாகவே தமிழர் உள்ளங்களில் புகுந்துவிட்டது. அதில் விளைந்ததுதான் - தமிழ்நாட்டின் நிரந்தர ‘நெ. 1’ இடம். எது வரை, இந்த சாமான்யர் - அதிமுக உறவு இப்படியே தொடர்கிறதோ, அதுவரை, அதிமுகவின் நெ 1 நிலையும் அப்படியேதான் இருக்கும். அது ‘இடம் மாறுவதற்கு’ வாய்ப்பே இல்லை. 
மூன்றாவது ஒரு காரணம் - சற்றே நுட்பம் ஆனது. 


- கட்டுரையாளர்: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி