கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் பகுதியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மு.க. ஸ்டாலினிடம்  அதிமுகவைச் சேர்ந்த மகளிரணி துணை தலைவர் பூங்கொடி வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் அவரைத் தாக்கினர். இந்த விவகாரத்தில் பூங்கொடிக்கு ஆதரவாக வந்த முனி, பூங்கொடி, மகேஸ்வரி, ராஜன் ஆகியோரும் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரம் என்பவர் தேசிய தாழ்த்தபட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள், இந்த விவகாரம் தொடர்பாக 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக டி.ஜி.பி. மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி. ஆகியோருக்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.