திமுக என்பது குடும்ப கட்சி,  அது வாரிசு இயக்கம், ஆனால் அதிமுக மக்கள் பணி செய்யும் இயக்கம், இது நூறு ஆண்டுகள் மக்கள் பணி செய்யும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றியே தீருவோம் என அமைச்சர் சி.வி சண்முகம் அவேசமாக தெரிவித்துள்ளார்.

வல்லம் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சேர்விளாகம், கீழ்மாம்பட்டு ஆகிய பகுதிகளில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டத் துறை அமைச்சருமான சி.வி சண்முகம் கலந்துகொண்டு பாசறை நிர்வாகிகளுடன் ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக இப்போது மிக முக்கியமான கால கட்டத்தில் உள்ளது. 

மிக விரைவில் தேர்தல் வர இருக்கிறது, 2011ம் ஆண்டு தேர்தலில் கழகம் வெற்றி பெற்றதற்கு முழு காரணம் இளைஞர்கள் மற்றும் தாய்மார்கள் தான் எனவே அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய  மகளீரை மையமாகக் கொண்டிருக்கும். திமுக ஒரு குடும்ப கட்சி, வாரிசு இயக்கம், அக்கட்சியினர் கவர்ச்சியான திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றுவார்கள். எனவே திமுக  தலைவர் ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது. அவரது முதலமைச்சர் கனவு பலிக்காது. 

அதேபோல் பாசறை நிர்வாகிகள் ஆதரவில்லாமல் எந்த இயக்கமும் வளர்ச்சி அடைய முடியாது, உங்களின் பலம் எங்களுக்கு நன்றாக தெரியும், நீங்கள் தான் அடுத்த தலைமுறைக்கு காட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும், உங்களின் தேவைகள் என்னவோ அதை நாங்கள் செய்து தருகிறோம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறியதைப் போல கழகம் நூறு ஆண்டுகள் மக்கள் பணியை செய்ய இளைஞர் பாசறை நிர்வாகிகள் பணியாற்றவேண்டும். கழகம் மூன்றாவது முறையும் ஆட்சி அமைக்க அரும்பாடு பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.