அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்பது அரசின் கொள்கை முடிவு, இவ்வாரத்தில் விதி மீறி செயல்படுபவர்களை அரசு ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது  என்று அமைச்சர் கே.பி அன்பழகன் கூறியுள்ளார். அதிமுகழகத்தின்  49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தர்மபுரி மாவட்ட கழக அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கேக் வெட்டி கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினர். அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.பி அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:  புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட கழகம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பிறகு அமைச்சர் எடப்பாடியாரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து ஆட்சியை சிறப்பாக வழிநடத்துகின்றனர். ஜெயலலிதா கூறியது போல கழகம் இன்னும் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். கடந்த இடைத்தேர்தலில் கூட வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தந்த மாவட்டம் தருமபுரி மாவட்டம்தான். வரும் சட்டமன்ற தேர்தலிலும் தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற செய்து மீண்டும் கழக ஆட்சி அமைய சூளுரைப்போம். எந்த ஒரு நிகழ்வானாலும் ஆழமாக சென்று அதன் மூலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை கிடைத்தது என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்வோம். தமிழ்நாட்டு மக்களுக்கு தீமை கிடைக்கிறது என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். எதிர்ப்போம். அந்த கொள்கையோடு எங்களையெல்லாம் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வளர்த்தார். அதே வழியில்தான் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் போராடி, வாதாடி பெற்றுக்கொடுத்த 69 சதவீத இட ஒதுக்கீட்டை என்றைக்கும் இழக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. இந்தச் சூழ்நிலையில் தான் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்பது தேவையில்லை என்பது அரசின் கொள்கை முடிவு, இது காலதாமதமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இதில் வெளி மாநில மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள், கல்வி கட்டணம் உயர்வு ஆகவே அம்மாவின் வழியை பின்பற்றக்கூடிய அரசு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒரு கேடு வருகிறது என்றால் வேடிக்கை பார்க்காது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சுதந்திரமாக செயல்பட மாநில அரசு தடுக்கிறது என்று  பாஜக தலைவர் கூறியிருக்கிறார், அவருடைய பதவி என்பது மூன்றாண்டு கால பணியாகும், துணைவேந்தர் என்ற வகையில் செயல்படலாம் ஆனால் அதில் விதிமீறல்கள் இருக்கிறது. அவர் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும், மீறி செயல்பட்டால் தமிழக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது என எச்சரித்தார்.