மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து தலைமை இன்னும் முடிவு எடுக்கவில்லை என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற பிரதமர் மோடி புதிய அமைச்சரவையுடன் தனது 2வது ஆட்சிப் பதவியைத் தொடங்கினார். 24 கேபினட் அமைச்சர்கள், ஒன்பது இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு), 24 இணை அமைச்சர்கள் உட்பட 57 அமைச்சர்களுடன் மோடி பதவியேற்றார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், சிவசேனா (அரவிந்த் சாவந்த்), சிரோன்மணி அகாலிதளம் (ஹர்சிம்ரத் கவுர் பாதல்), லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பஸ்வான்), இந்திய குடியரசு கட்சி (ராம்தாஸ் அதவாலே) ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.

இவற்றில், கடந்த 2019ம் ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, பாஜக-சிவசேனா இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய அரசில் அங்கம் வகித்த சிவசேனா விலகியது. அடுத்ததாக, வேளாண் சட்டங்களை முன்னிறுத்தி சிரோன்மணி அகாலிதளமும் சமீபத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனால், மேற்கண்ட இரு கட்சிகளின் அமைச்சர்களும் பதவி விலகினர். இதைத்தொடர்ந்து, ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனாவாலும், லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் இருந்த ராம்விலாஸ் பஸ்வான் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தனர்.

இதனால், 2 அமைச்சர்கள் மறைவும், 2 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் 4 மத்திய அமைச்சர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த பதவியை பிடிக்க வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்குமாருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகரும் நியாய விலைக்கடை துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது என தெரிவித்துள்ளார். இவரின் இந்தக் கருத்து அதிமுகவில் உள்ள ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.