திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த 2016 நவம்பரில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன், வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கிய படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகையில் சந்தாகம் இருப்பதாகவும் என வே இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போதே ஏ.கே.போஸ் இறந்து விட்டார். 

அதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை விரைவாக பிறப்பிக்க வேண்டும் என்று திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கைக் காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தற்போது இடைத்தேர்தலை தள்ளி வைத்துள்ளது என்றும் முறையீடு செய்தார். இந்நிலையில் இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லையே என தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

நீதிபதி வேல்முருகன் அளித்த தீர்ப்பில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றிபெற்றது செல்லாது. அதே நேரத்தில் சரவணனை வெற்றிபெற்றதாக அறிவிக்க முடியாது’ என தீர்ப்பளித்தார். போஸ் மறைவடைந்ததால் தன்னை வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்கிற டாக்டர் சரவணனின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.