சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்வதற்கான ஆயத்தப்பணிகளில் அதிமுக இறங்கியுள்ளது போன்ற சமிக்ஞைகள் தென்படத் தொடங்கியுள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த வாரம் சேலத்தில் காலமானார். இதனை முன்னிட்டு தமிழக தலைவர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை பலரும் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டும், அறிக்கைகள் வாயிலாகவும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கடிதம் முழுக்க முழுக்க இந்தியில் எழுதப்பட்டிருந்தது.

தனக்கு வந்த கடிதத்தை முதலமைச்சர் அலுவலகம் மூலமாக எடப்பாடி பழனிசாமி ஊடகங்களுக்கு வழங்கினார். ஆனால் அந்த கடிதத்தை பார்த்து முதலில் கொதித்தவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆங்கிலத்திற்கு பதில் இந்தியில் இரங்கல் கடிதம் அனுப்பிய அமித் ஷாவிற்கு எந்த அளவிற்கு ஆணவம் பாருங்கள் என்று அந்த அறிக்கையில் வைகோ கூறியிருந்தார். அதோடு மட்டும் அல்லாமல் அமித் ஷாவின் தாய் மொழி கூட குஜராத்தி தான், ஆனால் அவர் எப்படி இந்தியில் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதலாம் என்று வைகோ பிரச்சனையை கிளப்பினார்.

இதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அமித் ஷாவும் – வைகோவும் எதிர் எதிர் முகாமில் உள்ளனர். ஆனால் அதிமுக அமைப்புச் செயலாளராகவும் மாநில திட்டக்குழு துணைத் தலைவருமான பொன்னையன் இந்த விவகாரத்தை கையில் எடுத்தது தான் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அமித்ஷாவின் தாய்மொழி இந்தி இல்லை, ஆனாலும் அவர் இந்தியில் கடிதம் எழுதுகிறார் என்றால் எப்படிப்பட்ட வெறிச்செயலில் தற்போதுள்ள மைய அரசு மொழி திணிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு அதுவே எடுத்துக்காட்டு என்று பொன்னையன் கூறியுள்ளார்.

இது பாஜகவிற்கு மட்டும் அல்ல அதிமுக வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தற்போது வரை பாஜக, அதிமுக கட்சிகள் கூட்டணியில உள்ளன. அப்படி இருக்கையில் கூட்டணியில் உள்ள பாஜகவின் மிக மிக முக்கியமான மற்றும் அதிகாரமிக்க தலைவரை மொழி வெறி பிடித்தவர் என்கிற ரீதியில் பொன்னையன் விமர்சித்துள்ளது சலசலப்பை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் அதிமுகவினர், ஹெச்.ராஜாவை விமர்சிக்க கூட அண்மைக்காலமாக யோசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் பொன்னையன் போன்ற மூத்த தலைவர் அமித் ஷாவை உரசியுள்ளது சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாதது.

 

ஏனென்றால் அமித் ஷா விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றால் அதற்கு நிச்சயம் அதிமுக மேலிடத்தின் ஒப்புதல் தேவை. குறைந்தபட்சம் இந்த விவகாரத்தை தலைமையின் கவனத்திற்காகவாவது கொண்டு சென்று இருக்க வேண்டும். எனவே பொன்னையன் போன்ற மூத்த தலைவர்கள்அ திமுக தலைமையின் மன ஓட்டத்திற்கு விரோதமாக இந்த விஷயத்தில் பேசியிருக்க முடியாது. மேலும் அதிமுக தலைமை இனி பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க ஆயத்தமாகி வருவதற்கான அடையாளம் தான் பொன்னையனின் இந்த அமித் ஷா விமர்சன பேச்சு என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

அதே சமயம் பொன்னையனை அதிமுக மேலிடம் தூண்டிவிட்டு பேச வைக்க எல்லாம் வாய்ப்பு இல்லை என்று பாஜக தரப்பில் கூறுகிறார்கள். பொன்னையன் தன் மனம் போன போக்கியில் பேசியிருக்கலாம் என்றும் அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் பொன்னையன் போன்ற மூத்த தலைவர்கள் நிச்சயம் அமித் ஷா குறித்து பேசும் போது மிகுந்த கவனமாக வார்த்தைகளை கையாள்வார்கள். ஆனால் அவரே மொழி வெறி என்கிற வார்த்தையை பயன்படுத்தி அமித் ஷாவை விமர்சித்திருப்பது ஒரு அரசியல் நடவடிக்கை தான் என்பதில் மற்றுக் கருத்து இருக்க முடியாது.