தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டுக்கு முன்பே சட்டப்பேரவைத் தேர்தல் வரலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் அதிமுக தொழிற்சங்கக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தவர்கள், கடந்த காலங்களில் அதிமுகவில் பதவி, பணம் சம்பாதித்தவர்கள். அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது வேஷ்டியைக் கட்டிக்கொண்டும், எதிர்கட்சியாக மாறினால் வேஷ்டியை மடித்து வைத்து விடும் பழக்கமும் கொண்ட கட்சி அல்ல. ஆனால், திமுக அப்படியல்ல. எதிர்கட்சியாக மாறினால் வேஷ்ட்டியை மடித்து வைத்து விட்டு பேண்ட் சட்டைக்கு மாறி விடுவார்கள்.
அதிமுகவை கருணாநிதியாலேயே அசைத்துப் பார்க்க முடியவில்லை. விசிலடிச்சான் குஞ்சுகள் என்று அதிமுக தொண்டர்களை விமர்சித்தார். எம்ஜிஆர் கட்சிக்கு கேரண்டி இல்லை என்றெல்லாம் பேசினார். ஆனால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. எவ்வளவோ பேர் சென்றாலும் அதிமுக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. எனவே, யார் எங்கு போனாலும் அதிமுக கலங்காது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளி நாட்டில் இருந்தவர். அவர் விளம்பரத்துக்காகத்தான் இப்போது வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார். 
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கு முன்னரே சட்டப்பேரவைத் தேர்தல் வரலாம். அதற்கான சூழல் உருவாகலாம். அப்போது அதிமுகதான் ஆட்சிக்கு வரும்.” என்று செல்லூர் ராஜூ பேசினார்.
