சிவகங்கையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற திருமண விழாவில் அதிமுக மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பள்ளிக்கரணை அருகே அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ‘பேனர்’ காற்றில் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது விழுந்தது. அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனை தொடர்ந்து அதிமுக, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்கள் என்று பலரும் தங்களுக்கு பேனர் வைப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என அறிக்கையில் வெளியிட்டனர். 

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அ.தி.மு.க.வினர் அதை கண்டுகொள்ளவில்லை. தேவகோட்டை தானுச்சாவூரணி பகுதியில், நேற்று நடந்த திருமண விழாவில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமியை வரவேற்று தனித்தனியே பேனர்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அரசு அதிகாரிகள் செயல்படுத்தால் ஆளுங்கட்சியினருக்கு கைகட்டி வேடிக்கை பார்த்தனர்.