அதிமுகவில் உள்ள எங்களின் ஸ்லீப்பர் செல்கள் தொடர்ந்து எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்லீப்பர் செல்கள் அமைச்சர்களாகக் கூட இருக்கிறார்கள் என்று வெற்றிவேல் கூறியுள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை அடையாறிலுள்ள அமமுக பொதுச்செயலாளர் தினகரன் இல்லத்தில் அமமுக வடசென்னை மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெற்றிவேல் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று பேரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இல்லை. அவர்கள் அதிமுகவில் தான் உள்ளார்கள். மூன்று பேரும் எங்களுக்கு நண்பர்கள். அவர்கள் மீது சட்டநடவடிக்கை  எடுக்க முடியாது. அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. அதை மீறி அதிமுகவினர் ஒருதலைபட்சமாக செயல்பட்டால் மூன்று பேருக்கும் நாங்கள் ஆதரவாகவே இருப்போம். அதிமுகவினர் பயத்தினால் தான் இதுபோன்ற  நடவடிக்கையை எடுக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

 

 திமுகவுக்கு ஆதரவளித்த தமிமுன் அன்சாரி மீதும், அதிமுகவுக்கு எதிராக பேசிய கருணாஸ் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய வெற்றிவேல், 3 பேரின் மீதும் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் பக்கம் நாங்கள் இருப்போம். நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டாம், தேர்தலில் நின்று வெற்றிபெறலாம் என அவர்களிடம் ஆலோசனை சொல்வோம்” என்றும் குறிப்பிட்டார். சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார். 

மேலும் அவர் பேசுகையில் எடப்பாடிக்கு எதிராக 11 எம்.எல்.ஏக்கள்  வாக்களித்தனரே அவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஓ.பன்னீர் செல்வத்திற்கு துணைமுதல்வர் பதவி கொடுத்தது ஏன்? ஆட்சி போய்விடுமோ என்ற பயத்திலேயே இதுபோன்று செயல்படுகிறார்கள். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த பின்னர் எங்களின் முடிவை அறிவிப்போம்.

அதிமுகவில் நிறைய கோஷ்டி பூசல் உள்ளது. நாங்கள் 22 பேரும் வெற்றி பெற்று வந்தோம் என்றால் அதிமுகவில் உள்ள ஸ்லீப்பர் செல்கள்  மூலமாக ஆட்சியை பிடிப்போம். நிறைய அமைச்சர்கள் எங்களுக்கு ஸ்லீப்பர் செல்லாக உள்ளார்கள். தகுதி நீக்கம் என்ற ஆயுதத்தை அவர்கள் கையில் எடுக்கும்போது நாங்கள் ஸ்லீப்பர் செல்களை கையில் எடுப்போம் வெற்றிவேல் எச்சரிக்கை எடுத்துள்ளார்.