பண்ருட்டி அருகே அமைச்சர் எம்.சி.சம்பத், எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் ஆதரவாளர் இடையே நேற்று கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கடலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் ஓர் அணியாகவும், கடலூர் தொகுதி எம்.பி. அருண்மொழிதேவன் மற்றும் பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன் உள்ளிட்டோர் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி அரசியல் மற்றும் திட்டப்பணிகள் சம்பந்தமாக பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ ஆதரவாளர்கள் புறக்கணிப்பு செய்தும் தொடர்கதையாகி வருகிறது. 

இந்நிலையில் நேற்று பண்ருட்டி அருகே ஒறையூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் கலந்து கொள்ள கடலூர் எம்பி அருண்மொழித்தேவன், பண்ருட்டி எம்எல்ஏ  சத்யாபன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி காரில் வந்தனர். அங்கிருந்த அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்களான ஒன்றிய செயலாளர் கந்தன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் கனகராஜ் மற்றும் சிலர் திடீரென எம்பி காரை முற்றுகையிட்டனர். எங்களுக்கு அழைப்பிதழை கொடுக்காமல் எப்படி விழா நடத்தலாம் என கேள்வி எழுப்பினர். இதற்கு எம்பி அருண்மொழித்தேவன் அதுபற்றி விசாரிக்கிறேன், முதலில் விழாவுக்கு வாருங்கள் எனக் கூறி அழைத்தார். ஆனால் யாரும் செல்லவில்லை. 

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளானது. பிறகு அப்பகுதிக்கு விரைந்த போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து செல்லும் வழியில் புதுப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் கணவர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றனராம். அப்போது, அங்கிருந்த அமைச்சரின் ஆதரவாளர்களை தாக்கி, அலுவலகத்திலிருந்த பொருள்களையும் சேதப்படுத்தினராம். இந்த தாக்குதலில் தொகுதிச் செயலர் ராமசாமி காயமடைந்தார். 

மேலும் அலுவலகத்தில் இருந்த சேர்கள் தூக்கி வீசப்பட்டு உடைக்கப்பட்டன. இதையடுத்து அமைச்சரின் ஆதரவாளர்கள் கும்பலாக புதுப்பேட்டை காவல்நிலையம் சென்று தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என புகார் செய்தனர். இதேபோல் எம்எல்ஏ ஆதரவாளர்களும் ஆன்லைனில் புதுப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தனர். ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் மாறிமாறி  தாக்கிக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக கோஷ்டி மோதல் காங்கிரஸ் மிஞ்சும் அளவுக்கு அதிமுகவில் கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது. உடுமலை ராதாகிருஷ்ணன் ஒரு அணியாகவும், பொள்ளாச்சி ஜெயராமன் ஒரு அணியாகவும், அமைச்சர் சேவூர் ராமசந்திரன், பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வின் உட்கட்சிக்குள் தேர்தல் நேரத்தில் கிளம்பியிருக்கும் இந்த போரை உடனே நிறுத்தாவிட்டால் மிகப்பெரிய சரிவுகளை அக்கட்சிக்கு காட்டுவது உறுதி என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி செய்வது அறியாமல் திகைத்து போயியுள்ளார்.