Asianet News TamilAsianet News Tamil

இப்படித்தான் இருக்கு 21 மாத திராவிட மாடல் ஆட்சி.? ஓபிஎஸ் கொடுத்த திடீர் ட்விஸ்ட் - அதிர்ச்சியில் திமுக !!

வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணாக செயல்படும் ஆட்சியாகவும், மக்களை வஞ்சிக்கும் ஆட்சியாகவும், மக்களை விரக்தியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் ஆட்சியாகவும் இருக்கிறது. - ஓ.பன்னீர்செல்வம்.

Aiadmk o panneerselvam who spoke against speech 21 months dmk govt performance
Author
First Published Feb 15, 2023, 7:26 PM IST

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உள்ளத்தால் பொய்யை நினைக்காதவர்கள் உலகத்தார் உள்ளத்துள் நிலையான இடத்தைப் பெறுவார்கள் என்றார் திருவள்ளுவர். இதற்கு முற்றிலும் மாறாக, தி.மு.க.வினரும், தி.மு.க. தலைவரும் சதா சர்வகாலமும் பொய்யையே பேசி வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வரிசையில், அண்மையில் அளித்த கேள்வி-பதில் அறிக்கையில், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் 85 சதவிகிதம் நிறைவேற்றி உள்ளதாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை நிலை என்னவென்றால், பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததோடு, வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அனைத்துத் தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்ற வாக்குறுதி தி.மு.க.வால் அளிக்கப்பட்டது. இதில் பெட்ரோல் விலை மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அதாவது, இந்த வாக்குறுதியைப் பொறுத்த நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. வரையில் 40 விழுக்காடு தான்.

Aiadmk o panneerselvam who spoke against speech 21 months dmk govt performance

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்குதல் மற்றும் உளுத்தம் பருப்பு வழங்குதல்; 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் ஓய்வூதியத் தொகையை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்குதல், 32 இலட்சம் ஆதரவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதைக் கடந்த மணமாகாத பெண்கள், உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஆகியோருக்கான ஓய்வூதியத்தை 1,500 ரூபாயாக உயர்த்துதல், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணியமர்த்தி கால முறை ஊதியம் வழங்குதல், மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூபாய் 1,000 வழங்குதல், 

நடைபாதைவாசிகளுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைத்தல், நீட் தேர்வு ரத்து, புதிதாக இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வருதல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை 70 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும், 80 வயதுக்கு மேல் மேலும் 10 விழுக்காடாகவும் உயர்த்தி வழங்குதல்,

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக உயர்த்துதல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்துதல், மீனவர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல், பொதுப் பட்டியலில் உள்ள கல்வித் துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருதல், பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம்; மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்சவரம்பினை இலட்சமாக 25 உயர்த்துதல், 100 நாட்கள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துதல், கல்விக் கடன் ரத்து என சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு நூற்றுக்கணக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இதையும் படிங்க..25 மாத திமுக ஆட்சி.? எடப்பாடி அலை வீசுது.! துணிவுடன் தேர்தலை சந்திக்கும் அதிமுக - ‘கலகல’ செல்லூர் ராஜு

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை தேர்தல் சமயத்தில் அறிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபிறகு, அதற்கு பல நிபந்தனைகளை விதித்து இலட்சக்கணக்கானோரை கடனாளியாக ஆக்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது என்று வாக்குறுதி அளித்துவிட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுவதற்கு முன்பே சொத்து வரியை உயர்த்தி மக்களை வாட்டி வதைத்த அரசு தி.மு.க. அரசு.

மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் இரண்டு மாதங்களுக்கு 1000-யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை பயனடைவர் என்றும் வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டண உயர்வை ஆண்டுக்கு 16,000 ரூபாய் அளவுக்கு உயர்த்தி மக்களை வஞ்சித்த அரசு தி.மு.க. அரசு.

ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லும் தி.மு.க. அரசு, அதனை ஈடுகட்ட ஆவின் பால் பொருட்களான நெய், வெண்ணெய், தயிர், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் வகைகள் ஆகிய அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தியதோடு, ஆரஞ்ச் பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் அளவுக்கு உயர்த்திய அரசு தி.மு.க. அரசு. இது தவிர, பாலில் உள்ள கொழுப்புச் சத்தினை குறைத்துள்ளதோடு, நிதி நிலைமைக்கேற்ப அந்தந்த ஒன்றியங்கள் பாலின் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதியும் அளித்த அரசு தி.மு.க. அரசு. மொத்தத்தில் ஆவின் நிறுவனத்தில் பல குளறுபடிகள் நடந்து வருகின்றன.

Aiadmk o panneerselvam who spoke against speech 21 months dmk govt performance

இதுபற்றிய செய்திகள் நாள்தோறும் பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன. இதுதான் திராவிட மாடல் அரசின் 21 மாத கால சாதனை. அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள மூன்றரை இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதி தி.மு.க.வால் அளிக்கப்பட்டது. தி.மு.க.வின் வாக்குறுதிப்படி ஆண்டிற்கு குறைந்தபட்சம் 70,000 பணியிடங்களாவது நிரப்பப்பட வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் கடந்துள்ள நிலையில் 10,000 பணியிடங்களைக்கூட நிரப்பியதாக தெரியவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி நான்கிற்கான முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த மாதம் தான் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை. 2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்று வேலைவாய்ப்பை பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வாக்குறுதிக்கு முற்றிலும் மாறாக, போட்டித் தேர்வினை நடத்த தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது போதாது என்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்ட தாலிக்கு' தங்கம் வழங்கும் திட்டம், இரு சக்கர வாகனத் திட்டம், அம்மா உணவகங்கள் திட்டத்தை முடக்கிய அரசு தி.மு.க. அரசு.

மொத்தத்தில், கடந்த 21 மாத கால தி.மு.க. ஆட்சி என்பது, வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாகவும், வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணாக செயல்படும் ஆட்சியாகவும், மக்களை வஞ்சிக்கும் ஆட்சியாகவும், மக்களை விரக்தியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் ஆட்சியாகவும், தமிழ்நாட்டை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் ஆட்சியாகவும், சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் ஆட்சியாகவும் விளங்குவதுதான் யதார்த்தம்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள், யதார்த்தத்தின் அடிப்படையில் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று திமுகவுக்கு எதிராக கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

இதையும் படிங்க..NIA Raid : 40 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம் & பொருட்கள் என்னென்ன.? வெளியான தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios