அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை கண்டிப்பாக இருக்க வேண்டும்.. ட்விஸ்ட் வைத்து பேசிய வி.கே. சசிகலா.!
பத்து, இருபது பேரை தனக்கு ஆதரவாக பேச வைத்துவிட்டால் தலைவராக ஆகிவிட முடியாது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சசிகலா தொண்டரளைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடந்த வாரம், திருத்தணி, திருவள்ளூர் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா, இன்று பூந்தமல்லி பகுதியில் தொண்டர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். குமணன்சாவடி நிகழ்ச்சியில் சசிகலா தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், “திராவிட மாடல் என்று அனுதினமும் திமுகவினர் பேசிக்கொண்டு, நம்முடைய திராவிட தலைவர்களையும், திராவிட சிந்தனையாளர்களையும் சிறுமைப்படுத்துகிறார்கள். இதை அவர்கள் நிறுத்திக் கொண்டால், அது நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற நம் இருபெரும் தலைவர்களின் பொற்கால ஆட்சி திராவிட ஆட்சியா அல்லது தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்த விளம்பர ஆட்சி திராவிட ஆட்சியா? இந்தக் கேள்வியை தமிழக மக்களிடமே விட்டுவிடுகிறேன். 50 ஆண்டுகால வரலாற்றில் அதிமுக இப்போது போல தொடர் தோல்விகளை எப்போதும் கண்டதில்லை. அதிமுகவில் தற்போது நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் பார்க்கிறபோது ஒவ்வொரு கட்சித் தொண்டரும் மன வேதனையால் கண்ணீர் சிந்துகிறார்கள். இதற்காகவா இத்தனை ஆண்டுகள் நாமெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்தோம் என்று தொண்டர்கள் மனம் உடைந்து போயிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி.. அப்செட்டில் ஓபிஎஸ் - பொதுக்குழு நடக்குமா?
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய 34 பதவிகளுக்கு ஒரு சிலரின் தனிப்பட்ட சுயநலத்தால், நம்முடைய வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நநிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் இதுபோன்ற ஒரு சூழலுக்கு தள்ளிவிட்டிருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது. ஏதாவது சூழ்ச்சிகளை செய்தாவது தாங்கள் உயர்பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று எண்ணும் சிலர், சாதரண கட்சித் தொண்டர்கள் பதவிக்கு வருவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியாயம்? இது கட்சித் தொண்டர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.
ஒரு சிலரின் மேல்மட்ட அரசியலுக்காக அப்பாவி தொண்டர்களைப் பலி ஆக்குவதா? உங்களுயைட சுய விருப்பு, வெறுப்புகளு்க்காக இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு யார் முதலில் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? அதிமுக தலைமைக்கு என்று ஒரு பண்பு இருக்கிறது. அது, சாதி மதம் பார்க்காது. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் பார்க்காது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளை அடிபிறழாமல் கடைபிடிக்கிற ஒருவர்தான் உண்மையான தலைவராக இருக்கவே முடியும். அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை கண்டிப்பாக வேண்டும்தான். ஆனால், அதே சமயத்தில் தொண்டர்கள் அனைவரையும், அரவணைத்து செல்லும் தலைமையாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: நெருங்கும் பொதுக்குழு கிளைமாக்ஸ்.. அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்ஸுக்கு கல்தா.? இபிஎஸ் தரப்பின் புது ஸ்கெட்ச்.!
அந்தத் தலைமை அனைத்து கொடி பிடிக்கும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற தலைமையாக இருக்க வேண்டும். பண பலத்தாலோ படை பலத்தாலோ ஒரு தலைமையைத் தீர்மானிக்க முடியாது. மக்கள் பலமும் தொண்டர்கள் பலமும்தான் ஒரு தலைமையை தீர்மானிக்கும். பத்து, இருபது பேரை தனக்கு ஆதரவாக பேசவைத்துவிட்டால், நான்தான் தலைமை என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு, வலுகட்டாயமாக நாற்காலியை பிடித்துக் கொண்டு இருந்தால் தலைவராக ஆகிவிட முடியாது. எனவே ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பத்தின்படி என்னுடைய தலைமையில் இயக்கம் மீண்டும் வலிமை பெறும்” என்று சசிகலா பேசினார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்-வைத்தியலிங்கம் இடையே கருத்து வேறுபாடு..! புதிய குண்டை தூக்கிப் போட்ட நத்தம் விஸ்வநாதன்