முதல்வர், துணை முதல்வரைத் தாண்டி பாஜக ஆட்சியை விமர்சிக்கும் போக்கை அதிர்ச்சியுடன் பார்க்கத் தொடங்கியிருக்கிறது பாஜக.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை பாஜக இயக்கி வருகிறது; பாஜகவின் சொல்படி அதிமுக ஆடுகிறது என அதிமுகவைச் சுற்றி விமர்சனங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. அதிமுக ஆட்சியைக் காப்பாற்றுவதே மோடி அரசுதான் என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. காவிரி விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்த அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.பி. பழனிச்சாமியை அக்கட்சியிலிருந்து நீக்கும் அளவுக்கு முதல்வரும் துணை முதல்வரும் பாஜக பாசத்தை வெளிப்படுத்தினார்கள். 

பாஜகவை விமர்சிப்பதில் கூட கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்துவதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் பின்பற்றி வருகிறார்கள். ஆனால், அண்மை காலமாக அதிமுக எம்பிகள் பாஜக அரசை கடுமையாகச் சாடத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் அதிமுக எம்பி. தம்பிதுரை பல விவகாரங்களில் கேட்கும் கேள்விகள் பாஜகவை தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் இருந்து வருகின்றன. ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி தொடர்ந்து எழுப்பி வரும் கேள்விகளையே தம்பிதுரை எழுப்பியதை பாஜகவினர் யாரும் ரசிக்கவில்லை. இதேபோல 10 சதவீத இட ஒதுக்கீடு விஷயத்தில், மோடி வாக்குறுதி கொடுத்த 15 லட்சத்தைக் கொடுத்திருந்தால், இந்த இட ஒதுக்கீடே தேவை இருக்காது என்று கடுமையாக விமர்சித்தார். 

இதேபோல முத்தலாக் விவகராத்தில் அந்தப் பிரச்சினையைத் தாண்டி ஐந்து மாநில தேர்தலில் தோல்வி, ஜிஎஸ்டி எனப் பல விஷயங்களைக் குறிப்பிட்டு அதிமுக எம்.பி. அன்வர் ராஜா கடுமையாக விமர்சித்ததை எதிர்க்கட்சிகளே ஆச்சரியத்துடன் கவனித்தன. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இப்படி தொடர்ச்சியாக அதிமுகவினர் விமர்சிப்பதை பாஜகவினர் கொஞ்சமும் விரும்பவில்லை. மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் தம்பிதுரையின் விமர்சனம் தமிழக பாஜகவினருக்குக் குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

 

அதன் வெளிப்பாடக்கத்தான், ‘யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தம்பிதுரைக்கு இல்லை. கூட்டணியை ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

அண்மையில் முதல்வரை சந்தித்தபோது கூட இதைப் பற்றி தன் வருத்தத்தைப் பதிவு செய்ததாக பாஜகவினர் கூறுகிறார்கள். ஆனால், தற்போது அதிமுகவில் தலைமையை மீறி எல்லோரும் விருப்பப்படி பேசத் தொடங்கிவிட்டதால், இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அதிமுக தலைமை முழித்து வருகிறது.