கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வது தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சித் தலைவர்களுடன் நடத்திய வீடியோகான்பிரன்ஸ் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், கொரோனா தடுப்பூசி தொடர்பான திட்டங்களை மாநில அரசுடன் முன்கூட்டியே பகிர்ந்துகொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

 கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் தடுப்பூசி குறித்து பாரத பிரதமர் நேற்று நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் எம்பி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கொரோனா நோய்த்தொற்றை சமாளிப்பது குறித்து மாநில அரசுகளுக்கு தொடர்ந்து பிரதமர் அளித்துவரும் வழிகாட்டுதலுக்கும், ஆதரவிற்கும், கூட்டத்தில் அதிமுக சார்பில் உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

கொரோனாவிற்கு எதிரான போரில் முன்கள வீரர்களாக நின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அரசின் அனைத்து துறைகளின் அர்ப்பணிப்பு மிகுந்த பணியை நினைவு கூறுவதே, இந்த தருணத்தில் மிக முக்கியமானது. அனைத்து மாவட்டங்களிலும் 1.16 கோடி பேருக்கு கொரோனா நோய் பரிசோதனை செய்துள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு.  கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும், ஆய்வுகளையும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் மாவட்டம் தோறும் செய்து வருகிறார்கள். தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளால் கொரோனாவில் இருந்து மீண்டோர் சதவீதம் மாநிலத்தில் 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

கொரோனா தடுப்பூசியை பொறுத்தமட்டில் தமிழகத்தில் இரு இடங்களில் கோவி ஷீல்ட் என்ற தடுப்பூசியின் மூன்றாவது கட்ட கிளினிகல் பரிசோதனைக்கு ஐ.சி.எம்.ஆர் மற்றும் டிசிஜிஐ ஆகிய நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அறிவிக்கப்பட்ட முன்னுரிமை அடிப்படையில் covid-19 தடுப்பூசி வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். தடுப்பூசி போடுவது குறித்த வழிகாட்டுதல்கள் திட்டங்களை மாநில அரசுகளுடன் மத்திய அரசு முன்கூட்டியே பகிர்ந்து கொள்ள வேண்டும், கோவிட் தடுப்பூசி சிரிஞ்ச் கொள்முதல். அவற்றை குளிரூட்டிகளில் வைப்பதற்கான போக்குவரத்து நடைமுறைகள், ஆகியவற்றை மத்திய அரசு செய்யுமா அல்லது மாநில அரசுக்கும் அதில் பொறுப்பு இருக்குமா என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

 

மாநிலத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கோவிட் தடுப்பூசிகள் அனுபவமா, அல்லது மாவட்ட அளவில் விநியோகிக்கப்படுமா என்பது குறித்த விவரங்களையும் முன்கூட்டியே தெரிவித்தால் மாநில அரசுகள் திட்டமிடுவதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். தடுப்பூசி எப்போது வழங்கப்பட்டாலும் அதை இதே உத்வேகத்துடனும், மிகுந்த கவனத்துடனும் மக்களுக்கு வழங்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபடும் என்றும் இக் கூட்டத்தின் வாயிலாக உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.