Asianet News Tamil

வெற்றி பெற மலையையே நகர்த்தும் அதிமுக... இ.பி.எஸ்- ஓ.பி.எஸின் சூப்பர் மூவ்..!

2 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, சரியான தலைமை, சரியான வழிநடத்துதல் இன்றித் தவித்தது அதிமுக.

AIADMK moving the hill to win ... EPS-OPS Super Move ..!
Author
Tamil Nadu, First Published Apr 4, 2021, 4:50 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பணியாளர் நேர்முகத் தேர்வில் ஒரு  வினா விடை: 

'Can U move a mountain?'
'Yes'. 
'Is it? How will U do it?'
'Will move it stone by stone'.

'மலையைத் தள்ளி வைக்க இயலுமா?' 
'இயலும்'.
'எப்படிச் செய்வீர்கள்'?
'ஒவ்வொரு கல்லாக நகர்த்துவேன்'.

2021 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவின் நிலை இதுதான். 90 லட்சம் வாக்கு என்கிற மாமலையைச் சிறிது சிறிதாக இடம் மாற்றுகிற முயற்சியில் ஈடுபட்டுள்ளது அதிமுக.90 லட்சத்தையும் மாற்ற வேண்டியது இல்லை. அங்கிருந்து 45 லட்சம் இங்கே வந்தால் போதும். சமமாகி விடும். இம்முயற்சியில், அதிமுக வெற்றி பெற்றிருக்கிறதா..? சில உண்மைகளை ஒப்புக் கொள்ள வேண்டும். 

தேர்தல் களம்  திமுகவுக்கு ஆதாயமாக இருக்கிறது. வாரிசு அரசியல் குற்றச்சாட்டு திமுக ஆதரவாளர்களிடம் எடுபடவில்லை. இதே போல ஊழல் குற்றச்சாட்டையும் பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை. சிலரிடையே, தொற்று ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு மற்றும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அரசின் மீது கோபமாக மாறி இருக்கிறது. 

அதே சமயம், மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு, சட்டம் ஒழுங்கு பிரசினை ஆகியவற்றை மக்கள் மறந்து விடவில்லை. பணப் பட்டுவாடா கன ஜோராக நடந்து கொண்டு இருக்கிறது. ஓட்டுக்காகப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்பதெல்லாம் எடுபடவில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள நிலைமை இது.

2 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, சரியான தலைமை, சரியான வழிநடத்துதல் இன்றித் தவித்தது அதிமுக. கட்சியின் பல மட்டங்களிலும் விரக்தி, நிச்சயமற்ற தன்மை நிலவிய காலம் அது. இன்று அந்த நிலை இல்லை.இபிஎஸ் - ஓபிஎஸ் இரட்டைத் தலைமையின் கீழ் பழைய உத்வேகத்துடன் செயல்படுகிற இயக்கமாக உள்ளது இன்றைய அதிமுக. நன்கு செயல்படுகிற முதல்வராக ஈபிஎஸ் அடையாளம் காணப்பட்டு விட்டார். பயிற்சி இன்றி சோம்பிக் கிடந்த விளையாட்டு வீரர் அல்ல இப்போது; 100 மீட்டர் பந்தயத்தில் ஓடிச் சாதனை புரிகிற வெறியுடன் களத்தில் நிற்கிறார்.

2019 - 2021 இடையே மிகப் பெரிய வித்தியாசம் இது. இடைப்பட்ட காலத்தில் அதிமுக அரசு எடுத்த சில முக்கிய முடிவுகள், ஆற்றிய முக்கிய பணிகள் காரணமாய், களநிலைமை மிகக் கணிசமாக மாறி விட்டது. ) நமக்குச் சற்றும் உடன்பாடு இல்லாத, சாதி சமூக ஓட்டுகள் முதலில். சொல்வதற்குக் கூச்சமாக இருக்கிறது. சாதி அரசியலின் பிடி, தமிழகத்தில் இறுகி வருகிறது. இது மிகுந்த மன வேதனையைத் தருகிற 'முன்னேற்றம்'. ஆறு உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று நாடாளுமன்றத் தீர்மானம்; வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு. இவ்விரு சமூகத்தின் வாக்காளர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும். பாஜக மாநிலத் தலைவர் முருகன் காரணமாய் அருந்ததியர் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை.

மூன்றும் சேர்ந்து, சுமார் 10 லட்சம் வாக்குகளைக் கூடுதலாகக் கொண்டு வந்து சேர்க்கும் என்று அதிமுக நம்புகிறது. இது இந்தச் சமூகங்களில் பதிவாகும் மொத்த வாக்குகளில் சுமார்  10%. எனவே சாத்தியம் ஆகக் கூடும். 2) வேளாண் கடன் ரத்து;  காவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு; பரவலாக நடந்த குடிமராமத்துப் பணிகள்; பொங்கல் பரிசு ரூ 2500; பொதுவாக, காவிரி ஆறு, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் அதிமுக மீது மக்களுக்கு இருக்கிற நம்பிக்கை ... 10 லட்சம் வாக்குகளைக்  கொணரலாம். இதற்கும் சாத்தியம் இருக்கிறது.

3) நோய்த்தொற்று காரணமாக பொதுத்தேர்வுகளில் 'ஆல் பாஸ்' அறிவிப்பு, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு.. இரண்டுக்கும் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு தெரிகிறது. இதன் காரணமாக, முதன் முறையாக வாக்களிக்கிற இளம் வாக்காளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுகவுக்கு ஆதரவாகத் திரும்பலாம். இதன் பயனாய் 10 லட்சம் வாக்குகள் மடை மாறலாம்.

4) மாற்று அரசியலை முன் வைக்கிற சீமான், கமல் இருவரும் (சேர்ந்து) (5%) சுமார் 20 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெறலாம். நேர்மறை வாக்குகள் பிரிவது இல்லை; எதிர்மறை வாக்குகளே பிரியும். அதாவது 'இவர் வேண்டும்' என்று கருதுகிறவர் அவருக்கே வாக்களிப்பார். 'இவர் கூடாது' என்கிற நபருக்கு மாற்று தேவைப்படுகிறது. இவரின் விருப்பம் சீமான், கமலாக இருக்கலாம். 

இதன்படி 15ல : 5 ல. என்கிற விகிதத்தில் திமுக:அதிமுக வாக்குகள் பறி போகலாம். அதாவது இடைவெளியில் 10 லட்சம் குறையலாம். 5) நாடாளுமன்றம் - மாநில சட்டமன்றம் இரண்டுக்கும் வெவ்வேறு வகையில் வாக்களிக்கிறார்கள் தமிழர்கள்.மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி வேண்டாம் என்பது போல, மாநிலத்தில் திமுக கூடாது என்கிற எண்ணம் கொண்டு கணிசமானோர் உள்ளனர். ஒரு சாராரின் சமய உணர்வுகளைக் கடுமையாகப் புண்படுத்தியமை, பெண்களுக்கு எதிரான அநாகரிகப் பேச்சு, மிரட்டல் நடவடிக்கைகள்  போன்றவற்றுக்கான கடும் எதிர் விளைவைச் சந்திக்கிற கட்டாயத்துக்குத் திமுக தள்ளப்பட்டுள்ளது.  இது திமுக வுக்குக் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். 

6) கடந்த சில மாதங்களில், மாநில முதல்வராக இபிஎஸ் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்; பெருந்தொற்று பிரச்சினையைத் திறம்பட சமாளித்தார்  என்கிற கருத்து பரவலாக இருக்கிறது.ஸ்டாலின் Vs இபிஎஸ்  போட்டியில், அதிமுக முதல்வர் அதிரடியாக முன்னேறி இருக்கிறார். ஈபிஎஸ் மீது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிற நல்ல 'இமேஜ்' -  தமிழக அரசியலில் ஓர் எதிர்பாராத திருப்புமுனை. இந்த நல்ல 'இமேஜ்', அதிமுகவுக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தரலாம். 7) அதிசயமாக இந்த முறை, திமுகவை விட அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம் மிகவும் வலுவாக இருக்கிறது.

8) தினகரன் 2019இலும் தனித்தே நின்றார். அப்போது அவர் பெற்ற வாக்குகள் சுமார் 25 இலட்சம். இந்த முறை இது கணிசமாகக் குறையக்கூடும். இந்த வாக்குகள் அதிமுகவின் பக்கம் திரும்பவே வாய்ப்புகள் அதிகம். தேமுதிக குறிப்பிட்டுச் சொல்லும்படி வலிமையாக இல்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால், சுமார் 40 லட்சம் வாக்குகள் இடம் மாறுகின்றன. 

திமுகவில் 40 குறைந்து அதிமுகவில் 40 ஏறினால்..? இடைவெளி 10 லட்சமாகக் குறைகிறது. இந்த வித்தியாசம் 30 லட்சம் வரை இருந்தாலும் அதிமுக வெற்றி பெறலாம். அது எப்படி?திமுக வாக்குகள் ஒரு சில பகுதிகளில் ஏராளமாய்க் குவிந்து கிடைக்கின்றன.  குறைந்தது 50 தொகுதிகளில் திமுகழகம், இமாலய வெற்றி பெறும். (25000+)

மிதமிஞ்சிப் போனால் 10 தொகுதிகளில் அதிமுக 10000+ வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லலாம். 2019 தேர்தலில் சென்னையில் மட்டும் சுமார் 10 லட்சம் வாக்குகள் திமுகவுக்கு கூடுதல்.  திருவண்ணாமலை நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் அதிகம்.
இங்கெல்லாம் இப்போதும் இந்த வாக்கு விகிதம் பெரிதாக மாறப் போவது இல்லை.

மற்ற மாவட்டங்களில் குறிப்பாக கிராமப்புறத் தொகுதிகளில், பாரதிய ஜனதா கால் பதிக்காத பகுதிகளில், அதிமுக புகுந்து  'விளையாடுது'. இப்போது கள நிலைமை புரிந்து இருக்கும். திமுக அதிக ஓட்டுகள் பெறும். அதிமுக அதிக சீட்டுக்கள்  பெறும். இதில் எந்தப் புதிரும் இல்லை.திமுக வின் வாக்கு வங்கி அடர்த்தியாக இருக்கிறது. அதிமுகவின் வாக்குகள் பரந்து கிடக்கின்றன.திமுக வெற்றி பெறுகிற இடங்களில் எல்லாம் வாக்கு வித்தியாசம் அபரிமிதமாக இருக்கும்.

அதிமுக அதிக இடங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கு உட்பட்ட வித்தியாசத்தில் வெற்றி பெறும்.  சென்னை மதுரை கோவை திருச்சி நெல்லை தஞ்சை வேலூர் உள்ளிட்ட  நகர்ப்புறங்களில் திமுகழகம் அசுர பலத்துடன் வலிமையாக இருக்கிறது. கிராமப் புறங்களில் இன்னமும் இரட்டை இலை தான். நகர்ப்புறங்களில் 70%க்கு  குறைவாயும், கிராமப்புறத் தொகுதிகளில் 75%க்கு அதிகமாயும் வாக்குகள் பதிவானால்...?

இப்படி இருக்கத்தான் சாத்தியங்கள் அதிகம். இந்த வாக்குப்பதிவு சதவீதத்தை வைத்து எனது கணிப்பை தந்திருக்கிறேன். நகர்ப்புறங்களில் வாக்குப் பதிவு 70%க்கு கூடினால் திமுகவுக்கு சாதகம்; கிராமப்புறங்களில் 75% மேல் வந்தால் அதிமுகவுக்கு பலம். இதற்கு நேர் எதிராக, குறைந்த வாக்கு பதிவைக் கொள்ளலாம். என்ன தான் முட்டி மோதினாலும் சுமார் 50 தொகுதிகளில் 20,000+ வாக்கு வித்தியாசத்தை சரி செய்ய முடியாது. எனவே அதிமுக வின் செயல் திட்டம் (strategy) எப்படி இருக்கும்?

முதல்வரின் பேச்சில் தெரிகிற உறுதியை வைத்து இப்படி யூகிக்க முடிகிறது: 180இல் கவனம் (focus);140 - இலக்கு.  ('target')அதிமுகவின் செயல் திட்டம் ஒருவேளை பலித்தால்?  140 - சாத்தியம் இல்லாமல் போகலாம்.120 - கைகூட வாய்ப்பு இருக்கிறது.திமுகழகம் சுமார் 20 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெறும். அதிமுக, சுமார் 10 தொகுதிகள் கூடுதலாகப் பெறலாம். இறுதி முடிவுகள் இப்படி இருக்கலாம்:  (நினைவில் கொள்ளவும்: இது கணிப்பு; ஆசை அல்ல) கூட்டணி ஆட்சி (அ) கூட்டணி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருகிற ஆட்சிதான் கண்ணுக்குத் தெரிகிறது. 

எத்தனை இடங்கள் எதிர்பார்க்கலாம்? அதிமுக அணி 120, திமுகழக அணி 112 மற்றவை 2.நிறைவாக, வருகிற ஆட்சி மக்களுக்கு நல்லது செய்யும் என்று நம்புவோம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios