விழாவில் பங்கேற்க போவதில்லை என்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதன்படி இந்த விழாவில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதிமுக கூட்டணியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மட்டும் கலந்துகொண்டார்.
கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவை முழுவதுமாகப் புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உதாசீனப்படுத்தினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கிய நகரான கோவையில் 10 தொகுதிகளில் ஓரிடத்தைக்கூட திமுக வெல்லவில்லை. மாறாக, அதிமுக-பாஜக கூட்டணி எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்தபோதும் கோவையில் ஓரிடம்கூட வெற்றி பெறாமல் போனது த்ரிஷ்டி பொட்டு போல திமுகவுக்கு அமைந்தது. இந்தக் களங்கத்தை எப்படியும் போக்கும் முனைப்பில் திமுக உள்ளது. வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்று திமுக தீயாய் பணி செய்து வருகிறது.
அதற்கு வசதியாக கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக கரூரைச் சேர்ந்த செந்தில்பாலாஜியை திமுக களமிறக்கியுள்ளது. அவரும் மக்கள் சபைக் கூட்டம் என மாவட்டத்தைச் சுற்றி வருகிறார். கோவையில் அதிமுக முகமான எஸ்.பி.வேலுமணிக்குப் போட்டியாக செந்தில்பாலாஜிதான் தோதான ஆள் என்று அவரை இங்கே களமிறக்கியுள்ளது திமுக. முள்ளை முள்ளால் எடுப்பது போலவே எஸ்.பி.வேலுமணியைக் காலி செய்ய செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் களமிறக்கியிருப்பதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அண்மையில் கோவையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற நிலையில், கோவையில் இரு நாட்கள் அரசு முறை பயணத்தை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். கோவையில் நலத்திட்ட உதவிகள், புதிய திட்டங்கள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த விழாவில் பங்கேற்க கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இந்த விழாவில் பங்கேற்க போவதில்லை என்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதன்படி இந்த விழாவில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதிமுக கூட்டணியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மட்டும் கலந்துகொண்டார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களின் புறக்கணிப்பால், அவர்களுக்காக போடப்பட்டிருந்த நாற்காலிகள் காலியாக இருந்தன. அரசின் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டங்களில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆர்வமாகப் பங்கேற்ற நிலையில், முதல்வரே பங்கேற்ற அரசு விழாவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தது உதாசீனப்படுத்தியுள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக குறி வைத்து திமுக அரசு செயல்படுவதால் இந்தப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
