ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அவரது மனைவி, மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதியில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த கே. பழனி உள்ளார். இவர் ஊரடங்கு தொடங்கியது முதல் தொகுதி முழுவதும் நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். இதனிடையே, அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. 

இதனையடுத்து சென்னை ராமபுரத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நலம் குறித்து முதல்வரும் கேட்டறிந்தார். 

இந்நிலையில், ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனியின் மனைவி மற்றும் மகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தினரும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.