திருமலை நாயக்கரின் 437வது பிறந்த நாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது  மன்னரின் அரண்மனையான திருமலை நாயக்கர் மகாலில் தமிழக அரசு சார்பில் விழா நடத்த திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்க அமைச்சர்களுக்கு ஒரு சங்கத்தினர் அழைப்பு விடுத்தார்கள். அதற்கு ஒப்புதல் கொடுத்ததால் அழைப்பிதழில் 5 அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக தற்போது ஆந்திராவில் வசிக்கும் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் அழைக்கப்பட்டு இருந்தார். அந்த பெயரை பார்த்ததும், 5 அமைச்சர்களில் 2 பேர் அந்த பக்கமே தலைகாட்டவில்லை. மதுரை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் 2 பேரும், செய்தித்துறை அமைச்சரும் வந்திருந்தனர். அவர்களை அந்த சங்கத்தினர் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்றனர்.

அவர்கள் அரசு சார்பில் அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்து விழா மேடை ஏறினர். அவர்களிடம் ராமமோகன ராவ் வந்து கொண்டு இருப்பதாக சொல்லப்பட்டது.  அதை கேட்டதும் அமைச்சர்கள் விழா மேடையில் இருந்து அவசரமாக இறங்கி, காரில் ஏறி தலைதெறிக்க ஓடிவிட்டார்கள். ஏற்கெனவே மத்திய அரசின் உளவுப்பார்வையில் இருப்பவருடன் இருப்பது தெரிந்தால் பாஜகவால் பிரச்னை. சசிகலாவுக்கு வேண்டியவர் என்பதால் தங்கள் பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சமும் ஒரு காரணம் என்கிறார்கள். 

தப்பியோடியவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா.? ’’நாங்க அரசு சார்பில் சிலைக்கு மாலை அணிவிக்க தான் வந்தோம். விழாவுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று எஸ்கேப் ஆகிவிட்டார்களாம். சிறிதுநேரத்தில் அங்கு வந்த ராமமோகன் ராவிடம் இந்தத் தகவல் சொல்லப்பட்டுள்ளது. அவரோ ‘நான் என்ன செய்தேன். எதற்காக அமைச்சர்கள் ஓடுகிறார்கள்? ஒன்றும் புரியவில்லையே?’என்று புலம்பியதாகக் கூறுகிறார்கள்.