ஐடி ரெய்டு, கோஷ்டி மோதல்கள், இடைத்தேர்தல் என தட்டித்தடுமாறி வரும் எடப்பாடி அரசு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் 3 ஆண்டு சிறை தண்டனையால் திணறிபோய் தவிக்கிறது.

 

18 எம்.எல்.ஏக்களின் பதவி பறிப்பு, திருப்பரங்குன்றம், திருவாரூர் என மொத்தம் 20 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தாமல் இருந்ததால் ஆட்சியை தக்கவைத்து வருகிறது அதிமுக. திருவாரூரில் நடக்க இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதில் மகிழ்ச்சியடைந்தது அதிமுக. ஆனால், தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்தி வைத்த அன்றே அடுத்த ஆப்புக்குள் சிக்கி இருக்கிறது எடப்பாடி அரசு. காலையில் அடைந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்குள் மாலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீதான வழக்கின் தீர்ப்பு அதிமுகவுக்கு பேரிடியாய் அமைந்து விட்டது. அவரது அமைச்சர் பதவி மட்டுமல்ல, ஓசூர் தொகுதியும் காலியாகி விட்டது.

 

ஏற்கெனவே பெரும்பான்மையின்றி தத்தளித்து வரும் அதிமுக இப்போது இன்னொரு தொகுதியையும் இழந்து விட்டு தவிக்கிறது. இதனால் 21 தொகுதிகள் காலியாக உள்ளன. ஆனாலும், ஏப்ரல் மாதம் வரை இந்த அரசுக்கு சிக்கல் இல்லை காரணம் அதுவரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. ஆனாலும், பாலகிருஷ்ணரெட்டியின் பதவி காலியானது அதிமுகவுக்கு பேரிழப்பே...

அத்தோடு அவப்பெயரும் அதிமுகவுக்கு வந்து சேர்ந்து விட்டது. வெறும் வாயை மென்று கொண்டிருந்த எதிர்த் தரப்பினருக்கு அவலை மெல்லும் வாய்ப்பாக அமைந்து விட்டது. இதனால், டி.டி.வி.தினகரன் தரப்பும், திமுகவும் குதூகலிக்கின்றன.