முன்னாள் மிசா கைதியும் தீவிர திமுக தொண்டருமான மிசா கருப்பையாவுக்கு அவரது வறுமையின் காரணமாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் துணைத்தலைவரும், வாய் சவடால் குருசாமி  என்பவருக்கு மருத்துவ உதவிக்காக  அமைச்சர் ராஜேந்திர பாலாஜிஒரு லட்சம் நிதி வழங்கிய நிலையில், தற்போதைய திமுக பிரமுகருக்கு அவர் நிதி வழங்கியுள்ளார்.

அதிமுக அமைச்சர்களிலேயே அதிரடி அமைச்சர் என பெயர் வாங்கியவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மனதில் பட்ட எதையும் மறைக்காமல், வெளிப்படையாகப்  பேசக்கூடியவர், இதனாலேயே அவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவராகவும் இருந்து வருகிறார். சில தருணங்களில் முதல்வரே அவரை  நேரடியாக அழைத்து அவரது பேச்சுக்களை சுட்டிக்காட்டி எச்சரித்த நிகழ்வுகளும் உள்ளன. சமீபத்தில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அவர் தெரிவித்த கருத்து அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அது ஒரு புறமிருக்க, சில நாட்களாக,  திடீர் நடவடிக்கையாக வறுமையில் உழலும் மாற்றுக் கட்சியினரை சந்தித்து அவர்களுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிதி உதவி வழங்கி வருகிறார். இது அரசியில் களத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது. 

 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் துணைத்தலைவரும், அக்கட்சியின் முன்னணி பேச்சாளருமான வாய்ச்சவடால் குருசாமிக்கு கடந்த 5 தினங்களுக்கு முன்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இந்நிலையில் மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று தற்போது வறுமையில் வாடும் 81 வயதான திமுக பிரமுகருக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒரு லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 81 வயதான கருப்பையா, ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். திமுக பிரமுகரான இவர் கடந்த 1975 ஆம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடம் சிறையில் இருந்தவர். இவர் சிறையில் இருந்த போது அவரது 8 வயது மகன் இறந்த செய்தி கேட்டும்கூட அவர் பரோலில்கூட வெளிவர விரும்பாத கொள்கைப் பிடிப்பாளராக இருந்துள்ளார்.  

இந்நிலையில் கருப்பையா வறுமையில் வாடுவது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தகவல் கிடைத்த நிலையில், இன்று அவரது வீட்டிற்கே நேரில் வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 1 லட்ச ரூபாய் நிதி வழங்கினார். ஒரு லட்ச ருபாய் நிதி வழங்கிய அமைச்சருக்கு திமுக பிரமுகர் நன்றி தெரிவித்து கொண்டார்.