டெல்லி சென்று நரசிம்மராவுடன், துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுவார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது மீண்டும் சர்ச்சையையும், சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே திண்டுக்கல் சீனிவாசன் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளை கூறி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கல்வார்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், வேடசந்தூர் தொகுதி எம்எல்ஏ பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், இந்த சுகாதார நிலைய திறப்பை எம்எல்ஏ பரமசிவமே செய்திருக்கலாம். எங்களை அழைத்திருக்க தேவையில்லை என்றார்.

 

தற்போது நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பரமத்திவேலூரில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அடுத்து சிறிது நேரத்தில் இங்கு  வந்து விட்டு, மாலை புதுகை சென்று விடுவார். அதன்பின் டெல்லியில் போய் உட்கார்ந்து நரசிம்மராவுடன் பேசுவார் என்றார். இதனால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே பிரதமர் மோடிக்கு பதிலாக மன்மோகன்சிங் எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். பாரத ரத்னா எம்ஜிஆர் என்பதற்கு பதிலாக பாரத பிரதமர் எம்ஜிஆர் என்றார். மதுரை விழாவில் ஜெயலலிதா ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டார் என்பதெல்லாம் பொய் எங்களை மன்னித்து விடுங்கள் என்றார். தற்போது அதற்கும் ஒரு படி மேலே போய் முன்னாள் பிரதமரும், அதுவும் இறந்து போன நரசிம்மராவுடன், துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுவார் என கூறியது மீண்டும் சர்ச்சையையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.