ஒற்றைத் தலைமை குறித்து சர்ச்சை வெளியான நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மிகப்பெரிய மோதல் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உப்பு சப்பு இல்லாமல் முடிந்துள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி காலை 10.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வந்ததும் கூட்டம் தொடங்கியது. கூட்டம் துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே ஓபிஎஸ் அங்கு சென்றுவிட்டார். கூட்டத்திற்கு வர முடியாத சூழலை சி.வி. சண்முகம் மற்றும் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்சை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். 

இதே போல எம்.எல்.ஏ.க்கள் குன்னம் ராமச்சந்திரன், ஆறுகுட்டி மற்றும் கிணத்துக்குடவு எம்.எல்.ஏ. ஆகியோரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க முடியாததன் காரணத்தை கடிதமாக எழுதி தலைமைக்கு அனுப்பியிருந்தனர். இந்த தகவல் கூட்டம் துவங்கிய உடன் மற்ற நிர்வாகிகளிடம் வெளிப்படையாக பகிரப்பட்டது. முதலில் வைத்தியலிங்கம் தான் பேசியுள்ளார், தேர்தல் தோல்வி என்கிற இக்கட்டான சூழலிலும் அதிமுக என்றால் நாம் தான் என்பதை நிரூபித்துள்ளோம். இந்த நிலையில் ஒற்றைத் தலைமை என்று நாம் பேசுவது கட்சியை நம்மிடம் இழந்தவர்கள் மீண்டும் தலைதூக்க காரணமாகிவிடும் மேலும் அதிமுக என்றால் நாம் தான் இரட்டை இலை நம்மிடம் தான் இருக்கிறது. 

அடுத்த தேர்தலில் மக்கள் நம்மை ஆதரிப்பதற்கான சூழல் உருவாகும். எனவே இப்போது சின்னஞ்சிறு அல்ப ஆசைகளுக்காக கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை என்று காட்டமாக பேசிவிட்டு அமர்ந்துள்ளார் வைத்தியலிங்கம். இது முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியின் குரலாகவே அமைந்திருந்தது. 

இதனை தொடர்ந்து பேசிய கே.பி. முனுசாமியும் கூட கட்சி விவகாரங்களை இனி யாராவது வெளியே பேசினால் அடுத்த நிமிடம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் அரசியல் வாழ்வுக்கே சிக்கல் தான் என்கிற ரீதியில் எச்சரித்துள்ளார். அதாவது வைத்தியலிங்கம் எடப்பாடியாகவும், முனுசாமி ஓபிஎஸ்சாகவும் பேசியுள்ளனர். ஆனால் எடப்பாடியும் சரி ஓபிஎஸ்சும் சரி சாதாரணமாகவே பேசியுள்ளனர்.

ஆகஸ்டில் கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் அந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழியை பாருங்கள் என்பது தான் அவர்கள் இருவரின் பேச்சுகளின் சாராம்சமாக இருந்துள்ளது. கடைசியாக பேச வேண்டும் என்று ராஜன் செல்லப்பா உள்ளிட்ட சிலர் கேட்க அதற்கு நேரமில்லை பொதுக்குழுவில் பேசுங்கள் என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.