அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் - இபிஎஸ் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கி வரும் நிலையில், யாருடைய நீக்க அறிவிப்பு செல்லும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே எழுந்த விவகாரத்தால் அக்கட்சியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அதே மேடையில் ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜெ.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அன்றைய தினமே கருத்து தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், கட்சியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி, கே.பி. முனுசாமி ஆகியோரை நீக்குவதாக அறிவித்தார். இந்நிலையில் ஓபிஎஸ்ஸை ஆதரிக்கும் அவருடைய இரு மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், வெல்லமண்டி நடராஜன், சையதுகான் உள்பட 17 பேரை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதைக் கண்டித்த ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜக்கையன், ஆர்.பி உதயக்குமார், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, ஆதிராஜாராம், தி.நகர் சத்யா, விருகை ரவி, அசோக், சி.வி.சண்முகம், கந்தன், இளங்கோவன், செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், ராஜன் செல்லப்பா ஆகிய 22 பேரை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கட்சிகள் பிளவுப்படும்போது இரு தரப்பும் மாறி மாறி கட்சியிலிருந்து ஆதரவு நிர்வாகிகளை நீக்குவது வழக்கமான ஒன்றுதான். கட்சி பிளவுபட்டுவிட்டது என்பதை பட்டவர்த்தனமாக காட்டும் நடவடிக்கைதான் இது.
இதையும் படிங்க: ஏட்டிக்கு போட்டி... ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 22 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்... ஓபிஎஸ் அறிவிப்பு!!
ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் மாறி மாறி கட்சியை விட்டு ஆதரவு நிர்வாகிகளை நீக்கும் நிலையில், இதில் யார் நீக்குவது செல்லும் என்பதுதான் கேள்வி. தற்போதைய நிலையில் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிதான் இருக்கிறது என்று ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டால்தான் செல்லும் என்பதுதான் அதிமுகவில் இதற்கு முந்தைய காட்சி. அந்த வகையில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் மட்டும் கையெழுத்திடும் நீக்கம் செல்லுமா என்ற கேள்வி எழுகிறது.

இதேபோல இன்னொரு பக்கம் அதிமுகவின் பொதுச்செயலாளர் நான்தான் என்று சசிகலா சுற்றி வருகிறார். பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருக்குமே உரிமை இல்லை; கட்சி என் கட்டுப்பாட்டில் வரும் என்றெல்லாம் அவர் கூறி வருகிறார். இந்நிலையில் கட்சியில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு வந்துள்ள இபிஎஸ்ஸின் பதவி செல்லாது என்பதும் இவருடைய வாதமாக உள்ளது. ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே இருப்பதாக ஓபிஎஸ் கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லாது என்றும் கூறி வருகிறார். இந்தச் சூழலில் இரு தரப்பும் நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால், 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள், 70 மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதாக இபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. அது உன்மை என்பதை ஓபிஎஸ் தரப்பும் உணர்ந்தே இருக்கிறது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் M.P, உட்பட பன்னீர் ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கம்.. EPS அதிரடி.

என்றாலும், சுலபத்தில் விட்டு தர முடியாது என்ற நிலைப்பாட்டில்தான் ஓபிஎஸ் இருக்கிறார் என்பதையும் அவருடைய நடவடிக்கைகள் காட்டுகின்றன. எனவே, ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே தற்போது எழுந்திருக்கும் இந்தப் பிளவு விவகாரம் தேர்தல் ஆணையம் செல்லும் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. ஆக, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வந்த பிறகுதான் சிக்கல் தீரும் என்றும் சொல்லலாம். அதற்கான நடவடிக்கைகளை ஓபிஎஸ் - தரப்பு இறங்கி செய்து வருகிறது. கடந்த 1991-இல் ஜெயலலிதா - திருநாவுக்கரசர் இடையே இதேபோன்ற சூழல் ஏற்பட்டபோதும், விவகாரம் தேர்தல் ஆணையம் வரை சென்றது. பொதுவாகக் கட்சிகள் பிளவுப்படும்போது ஒரு தரப்புக்கு மெஜாரிட்டி இருந்தாலும், கடந்த காலங்களில் தேர்தல் ஆணைய உத்தரவு மூலமே கட்சி யாருக்கு என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே எழுந்துள்ள பிரச்சினையும் இந்த முறைப்படிதான் தீர்க்க முடியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதுவரை நீக்கங்கள் செல்லும், செல்லாது என்று கூறிக்கொள்ளலாம்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் மகனை ஏன் நீக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய ‘முரசொலி’.. கட்சியை விட்டு தூக்கி பதிலடி கொடுத்த இபிஎஸ்.!
