ஏஸியா நெட் தமிழ் இணையதளம் முன்னரே கணித்தது போலவேதான் போய்க் கொண்டிருக்கிறது ஆளுங்கட்சியின் அந்த வி.ஐ.பி.க்களுக்கு இடையிலான யுத்தம்....

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஆளுங்கட்சி சார்பாக போட்டியிட அதே தொகுதியை சேர்ந்தவரும், மாஜி அமைச்சரும், மாஜி கோயமுத்தூர் மேயருமான செ.ம.வேலுசாமி சீட் கேட்கப்போகிறார். ஆனால் அவருக்கு வாய்ப்பளித்தால் கூடிய விரைவில் அவர் தனி அதிகார மையமாக மாறிவிடுவார்! என்பதால் நிச்சயம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு சீட் கிடைக்க விரும்பமாட்டார்! என்று நாம் துவக்கத்திலேயே எழுதியிருந்தோம். 

அப்படியேதான் நடந்தது. வேலுசாமிக்கு சீட் கிடைக்காமல், மறைந்த எம்.எல்.ஏ. கனகராஜின் சித்தப்பா மகன் கந்தசாமிக்கு சீட் கொடுக்கப்பட்டது. இந்த சூழலில் ‘எனக்கு சீட் இல்லேன்னா, தொடர்ந்து அழைச்சுட்டு இருக்கிற தினகரன் அணிக்கு போக வேண்டிய சூழல் வரும். கோவை மாவட்டத்துல எனக்குன்னு இருக்கிற அரசியல் செல்வாக்கு உங்களுக்கு தெரியும். நான் உங்க மேலே வெச்சிருக்கிற மரியாதைக்குதான் அமைதியா இருக்கிறேன் தலைவரே!’ என்று முதல்வர் எடப்பாடியாரிடம் வேலுசமாமி முதலிலேயே முட்டியிருந்ததையும் நாம் எழுதியிருந்தோம்.

  

செ.ம. வேலுசாமிக்கு சீட் இல்லை என்பது உறுதியானதும் தினகரன் தரப்பிலிருந்து அவருக்கு தொடர் அழைப்புகள் வந்திருக்கின்றன. செ.ம.வேலுசாமியும் “மதிக்காத இயக்கத்துல இருந்து என்னத்த மண்ணள்ளிப் போடுறது? நாம் பேசாம சின்னம்மா சைடுக்கு போயிடுறேன், தினகரனுக்கு எனக்கும் எப்பவுமே நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்குது. அங்கே போய் உட்கார்ந்துகிட்டு இவங்க கண்ணுல விரல விட்டு ஆட்டணும். என்னைய ஏன்  இழந்தோமுன்னு இவங்க தவிக்கணும்! கோயமுத்தூர் மாவட்ட அரசியலையே தலைகீழா திருப்பிப் போடணும்.” என்று கர்ஜித்திருக்கிறார்.

 

ஆனால் அப்போது உள்ளே புகுந்து அவரை சமாதானப்படுத்திய அவரது நண்பர்களும், கழக சீனியர்கள் சிலரும் “அவசரப்பட வேணாம். ஆளும் அணியை இயக்குறது யாருன்னு உங்களுக்கே நல்லா தெரியும். தங்களோட கூட்டணியில அ.தி.மு.க. இருந்தாலுமே கூட, லேசா முறைப்பு காட்டுற அமைச்சர்கள் வீட்டுக்கு தேர்தல் நேரத்துல ரெய்டே விடுறாங்க. அந்தளவுக்கு ஆட்டிப் படைக்கிறாங்க. இந்த லட்சணத்துல நீங்க பாட்டுக்கு கோபிச்சுக்கிட்டு அங்கே போயி அரசியல்ல அதகளம் பண்ண ஆரம்பிச்சால், எடப்பாடியார், எஸ்.பி.வேலுமணியை விட அதிகம் ஆத்திரப்படப்போறது டெல்லி லாபிதான். 

அடுத்த நாளே ஐ.டி. ரெய்டை பாய வைப்பாங்க உங்க மேலே. உங்களோட சொத்து கணக்கு வழக்கு எந்தளவுக்கு, எந்த விதத்துல இருக்குதுன்னு உங்களுக்கே தெரியும். தினகரன் அணிக்கு போனதும்  நாளைக்கே ஆட்சி அவர் கைக்கு போயி, உங்களுக்கு மந்திரி பதவி கிடைச்சுட போறதில்லை. அதனால வெத்து கெளரவத்துக்காக பல வருஷமா சேர்த்துவெச்ச ஆஸ்தியை ஆத்துல அடிச்சுட்டு போக விட்டுடாதீங்க!” என்று எச்சரித்தார்களாம். உடனே மாஜி அமைச்சரும், ‘சரிதான்’ என்று தலையாட்டியவர், சொத்தா? கெளரவமா? என்று மாறி மாறி யோசித்தவர் இப்போதைக்கு ‘சொத்து’ என்று டிக் அடித்துவிட்டு அமைதி காக்கிறாராம். பின்னே, அரசியலுக்கு கெளரவமா அழகு? சொத்துதான் முக்கியம்.