வருங்கால முதல்வர், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் அதிமுகவில் மீண்டும் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை வெடித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகளில் திமுக முழு வீச்சில் இறங்கியுள்ளது. ஆனால், அதிமுக தரப்பில் இருந்து அப்பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. அதற்கு காரணம் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று தற்போது வரை அதிமுகவில் முடிவு எடுக்கப்படவில்லை. மீண்டும் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக வர வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ கூறியது ஓபிஎஸ்சை கடும் டென்சன் ஆக்கியது. இதனால் அவரை சமாதானம் செய்வதற்குள் இபிஎஸ் தரப்பிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது. 

இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு சென்னை ராயபேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆலோனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுக உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க தொடர்ச்சியாக வருகை தந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டை  தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்  வருகை தந்தனர்.

அப்போது, இருவரின் வருகையின் பொழுதும் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி தான் நிரந்தர முதல்வர்' என முழக்கம் எழுப்ப, மறுபுறம் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அம்மாவின் முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ்' என முழக்கமிட்டனர். சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து அதிமுக உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார்?, போஸ்டர் சர்ச்சை, சசிகலா விடுதலை விவகாரம், 2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் அதிமுக பொதுக்குழு கூட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.