தரும்புரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழினிச்சாமி ஆற்றிய உரையின் முழு விவரம்:- 

மாண்புமிகு அம்மாவின் அரசு, உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புப் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று தடுப்புப் பணிகள் குறித்தும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வுக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த புதிய வைரஸ் நோய் தொற்று இந்தியாவிலும், தமிழகத்திலும் பரவியது. முதலில் தருமபுரி மாவட்டத்தில் மிகக் குறைந்தளவில் இருந்தது. பின்னர் இங்கேயும் இது அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தருமபுரி மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இம்மாவட்டத்தில் நாளொன்றுக்கு 58 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கானவர்கள் பரிசோதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளித்ததால் நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நோய் தொற்றால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாவட்டத்தின் பிரதான தொழில் வேளாண் தொழில் ஆகும். இந்த மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள், மலர் விளைச்சல் அதிகம் உள்ளது. எனவே, கொரோனா ஊரடங்கில் விவசாயிகளை பாதிக்கும் வகையில், எந்தத் தடையும் அம்மாவின் அரசால் விதிக்கப்படவில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை எளிதாகச் சந்தைப்படுத்த அனைத்து அனுமதிகளும், தேவையான உதவிகளும் வழங்கப்பட்டன. தோட்டக்கலைத் துறை மூலமாக, விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் எந்தவகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு தேவையான உதவிகளை இந்தச் சோதனையான காலத்திலும் செய்து கொண்டிருக்கிறது. சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எவ்வித இடர்பாடும் இல்லாமல் தேவையான பயிர்க் கடனும் வழங்கப்பட்டுள்ளது. பூச்சிகளால் பயிர்கள் தாக்கப்படும்போது, அம்மாவின் அரசு, வேளாண் துறையினர் மூலம் உடனடியாக பூச்சிகள் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு விவசாயிகளின் நலனை  காத்து வருகிறது. 

வறட்சி மற்றும் இயற்கை சீற்றங்களினால் வேளாண் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பிற்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மூலம் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தந்ததும், வறட்சி நிவாரணம் அளித்ததும் மாண்புமிகு அம்மாவின் அரசுதான். இதுபோல் வேளாண் பெருமக்களுக்கு பல்வேறு உதவிகளை அம்மாவின் அரசு செய்து வருகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர், பவர் டிரில்லர், விவசாய உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. பண்ணைக்குட்டை அமைக்க நிதி ஒதுக்கப்படுகிறது. விதை, உர மானியமும் வழங்கப்படுகிறது. குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகளை தூர்வாருவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, தருமபுரி மாவட்டத்திலிருக்கும் பல ஏரிகள் மற்றும் குளங்கள் தூர்வாரப்பட்டிருக்கின்றன. இதன்மூலம், பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீரை சேமித்து வைக்கும் சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கிறோம். தடுப்பணைகள் கட்டுவதற்காக மூன்றாண்டு காலத் திட்டமாக ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில பணிகள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன. 

மாணவர்களின் உயர்கல்விக்காக மாண்புமிகு அம்மா அவர்கள் இருக்கின்றபோதும், தற்போது அம்மாவின் அரசும் பல்வேறு கல்லூரிகளை உருவாக்கித் தந்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் கோரிக்கையான அரசு சட்டக் கல்லூரிக்கு அனுமதி அளித்து, தேவையான கட்டடம் கட்ட ரூபாய் 58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இன்னும் 3 மாத காலத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அரூர் புறவழிச்சாலை அமைக்க ரூபாய் 8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஒகேனக்கல் -பென்னாகரம்-தருமபுரி-திருப்பத்தூர் சாலையை ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் இருவழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் பணி முடிவுற்றுள்ளது. சேலம்-திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையை ரூபாய் 297.55 கோடி மதிப்பீட்டில் இருவழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.