அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது என்று சிவகாசி அருகே கிருஷ்ணபேரி கிராம மக்களிடத்தில்   அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் போர் ஒரு பத்திரிகையாளரை பதம் பார்க்கும் அளவிற்கு சென்றது. இதனால் மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கும் பறிபோனது. மா.செ பதவி பறிபோனதில் இருந்து வாய்அடக்கி அமைதி காத்துவந்த கேடிஆர் சில தினங்களாக மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்து அதிரடி பேச்சுக்களை பேச ஆரம்பித்திருக்கிறார்.

சிவகாசி தொகுதி கிருஷ்ணபேரி கிராமத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும் போது..  "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அரசை தேடி பொதுமக்கள் சென்ற நிலை மாறி மக்களை நோக்கி அரசு உதவிகள் என்பதன் அடிப்படையில் அதிமுக அரசு தொகுதி மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது. 

அதன் அடிப்படையில் இந்த கிராமத்திற்கு நான் உங்களை தேடி வந்துள்ளேன்.  அனைத்து மனுக்களையும் விரைந்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிவகாசியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீரை நாங்கள் கொடுத்துள்ளோம். இனி சிவகாசி தொகுதியில் தண்ணீர் பற்றாக்குறை என்பதே ஏற்படாதவாறு தாமிரபரணி தண்ணீர் கொடுத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். சிவகாசி சட்டமன்ற தொகுதியின் முதல் பூத் என்ற வகையில் கிருஷ்ணபேரி மக்கள் அதிமுகவிற்கு என்றும் ஆதரவாக இருந்துள்ளீர்கள். உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருப்போம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு குறைகளை கூறலாம் என்று தெரிவித்தார்.