முதுகில் குத்தும் துரோக கூட்டம்.. இறைவனின் தீர்ப்பே இறுதி தீர்ப்பு.. ஓபிஎஸ் மகன் உருக்கமான பதிவு..!
நேர்மையான வழியை பின்பற்றுபவர்களுக்கு வெற்றியும் பின்னடைவும் சரிசமமே என ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.
எங்கள் கழக தலைவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் காலச்சக்கரத்தால் வழங்கப்படும் இறைவன் தீர்ப்பு வரும் வரை எங்களது லட்சிய பயணங்கள் தொடரும் என
ஜெயபிரதீப் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், கடந்த ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெற்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து ஜெயபிரதீப் கூறுகையில் இறைவன் தீர்ப்பு வரும் வரை எங்களது லட்சிய பயணங்கள் தொடரும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நேர்மையான வழியை பின்பற்றுபவர்களுக்கு வெற்றியும் பின்னடைவும் சரிசமமே.
கரங்களில் ஏந்தி இருக்கும் நீதிதராசு சரியாக இருக்கிறதா என்பதை அறிய நீதி தேவதை ஒருமுறை கண்ணைக் கட்டிய துணியை கழற்றி கண் திறந்து பார்த்து சரி செய்வது இந்திய இறையாண்மைக்கு நல்லது.
போர்படை தலைவனாக பொறுப்பேற்று எதிரியை எதிர்த்து, நெஞ்சை நிமிர்த்தி போரிடும் பொழுது, பின் நின்று முதுகில் குத்தும் துரோக கூட்டத்தை சிறிது கவனித்தும் தன் இனம் தானே என்று அமைதி காத்ததினால் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டாலும் தலைவன் எழுந்து நின்று திரும்பி பார்த்து துரோகிகளை எதிர்கொள்ளும் போது ஏற்படும் விளைவுகளை எதிர்காலம் அனைவருக்கும் உணர்த்தும்.
எங்கள் கழக தலைவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் காலச்சக்கரத்தால் வழங்கப்படும் இறைவன் தீர்ப்பு வரும் வரை எங்களது லட்சிய பயணங்கள் தொடரும் என ஜெயபிரதீப் கூறியுள்ளார்.