காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுகவினர் இருந்த உண்ணாவிரதம் போலியானது என்றும் மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசுக்கு எடுபிடி வேலை பார்க்கிறது தமிழக அரசு என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், தனது அரசியல் கட்சி அறிவிப்புக் கூட்டத்தை மதுரையில் பிப். 21 நடத்திய பிறகு அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. மதுரைக்கு அடுத்து பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை திருச்சியில் புதன்கிழமை நடத்துவதாக அறிவித்திருந்தார். இதன்படி, திருச்சி பொன்மலை ஜி கார்னர் சுப்பிரமணியபுரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை தயார் செய்யப்பட்டுள்ளது. 

மாநிலம் முழுவதும் இருந்து வரும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள், பெண்கள் அமருவதற்காக தனித்தனியே ஏ முதல் என் வரை ஆங்கில எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு 14 பிரிவுகளாக பிரித்து இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளி மேடையின் பின்புறம் பிரமாண்ட எல்இடி திரையில் மேடையின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒளிபரப்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவைத்தவிர, மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு இருந்த இடத்திலேயே தெளிவாக காணும் வசதியும் செய்யப்பட்டுள்ளது

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தனது கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை மாலை வருகை தந்தார். அவரது பெட்டியுடன் இணைந்து செய்தியாளர்கள், ஊடகத்தினர், பவுன்சர்களும் தனித்தனி பெட்டிகளில் வந்திருந்தனர். 

இந்த நிலையில், இன்று காலை கமல் ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் நீதி மய்யம் பிப்ரவரி 22 ஆம் அன்றே திருச்சி பொதுக்கூட்டம் பற்றி அறிவித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரத்துக்குள் அமைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், ஏற்கனவே நடந்ததுபோல் சாக்குபோக்கு காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர்க்கின்றனர். இப்போதும் அதே நாடகம் அரங்கேறுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. தமிழக அரசின் போலியான உண்ணாவிரதம் இருந்தது தனது இயலாமையை மறைக்க முயல்கிறது என்று கமல் ஹாசன் கூறினார்.