பல ஆண்டுகளாக கட்சியில் இருந்த மூத்த நிர்வாகியும், முன்னாள் பேரூராட்சி தலைவர் உட்பட பல நிர்வாகிகள் கூண்டோடு கட்சி மாறினர்.

தமிழகத்தில் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் பல்வேறு மாவட்டங்களில் நடந்து முடிந்துள்ளது. ஆனால் இன்னும் முறையான அறிவிப்பு தலைமை அறிவிக்கவில்லை. வேலூர் மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மாவட்டம், மாநகரம் என்று இரு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மாவட்ட செயலாளர்கள் தெரிவிக்கும் நபர்களுக்கு தான் வட்ட செயலாளர், கிளை, பேரூர் செயலாளர்கள் போஸ்டிங் கிடைக்கும் என்று நேரடியாகவே தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் ஆதரவாளர்கள் என்று அடையாளங்களுடன் செயல்பட்டவர்கள் எல்லாம் தற்போது கட்சியிலும், பதவியிலும் ஓரம்கட்டப்பட்டு வருகின்றனர். முன்பு ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கே முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கைகாட்டும் நபர்களுக்கு தான் பதவி வழங்கப்பட்டு வந்தது. தற்போது எனது மாவட்டத்திற்கு நான் தான் ராஜா என்று கூறி மாவட்ட செயலாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவரோடு, நான் எல்லாம் பஞ்சாயத்து பண்ண முடியாது என்று கூறிவிட்டாராம். இதனால் பல ஆண்டுகளாக கட்சியில் இருந்த மூத்த நிர்வாகியும், முன்னாள் பேரூராட்சி தலைவர் உட்பட பல நிர்வாகிகள் கூண்டோடு கட்சி மாறினர். மேலும் சிலர் கட்சி மாற தயாராகி வருகின்றனர்.

இனி அதிமுக கட்சியில் இருந்தால் பயன் இல்லை. மாவட்ட செயலாளர் தனக்கு வேண்டப்பட்டவர்களை மட்டுமே உடன் வைத்துக்கொண்டு இருக்கிறாராம். கட்சிக்கு வந்து குறுகிய காலத்திலேயே பதவிகளை வாங்கிக்கொள்ள வேண்டும், பெரிய ஆளாக வர வேண்டும் என எண்ணுகின்றனர். கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளனர். அவர்களை கட்சி தலைமை கண்டுகொள்ளுவது இல்லை என்று புலம்புகின்றனர் கட்சியினர்.