அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவஹர்லால் நேரு சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்து இருக்கிறார்.
தமிழகத்தில் 21மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் , 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதில் 138 நகராட்சிகளில் திமுக132 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.

பேரூராட்சியிலும் திமுகவே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றியை பெற்றிருக்கின்றனர். திருச்சியில் மொத்தமுள்ள 65 இடங்களில், திமுக கூட்டணி 59 இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக 3 இடங்களிலும், சுயேச்சை 2 இடங்களிலும், அமமுக 1 இடத்திலும் வெற்றியடைந்துள்ளது. பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள் ஒரு வார்டில்கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் துணை மேயர் சீனிவாசன் அதிமுக சார்பாக நின்று தோல்வியைச் சந்தித்தார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இவரது மகன் ஜவஹர்லால் நேரு திருச்சியின் 20ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் எல்.ஐ.சி சங்கர் என்பவர் போட்டியிட்டார்.

இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எல்.ஐ.சி சங்கர் வெற்றி பெற்றதாகத் தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகன், உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளரிடத்தில் தோல்வியடைந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில், குறிப்பாக திருச்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
