அதிமுக மீது விரக்தியில் உள்ளவர்கள் டி.டி.வி,.தினகரனின் நடத்தையால் திமுகவில் இணைய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 

ஜெயலலிதா ஆட்சியின் போது, கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் வீட்டுவசதித்துறை, தொழில் மற்றும் வணிகவரித்துறை, கூட்டுறவுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என பல்வேறு துறைகளில் அமைச்சராகவும், கோவை மாநகராட்சியின் மேயராகவும் இருந்தவர் வேலுச்சாமி.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ். ஆதரவாளராக மாறினார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வேலுச்சாமியும் குரல் கொடுத்தார். எடப்பாடி, ஓபிஎஸ் இணைப்புக்கு பிறகு தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தார். கோவை எம்.பி. தொகுதிக்கு சீட் கேட்டுப் பார்த்தார், கிடைக்கவில்லை. பா.ஜ.கவுக்குப் போய்விட்டது. வேலுச்சாமிக்கு சீட் கிடைக்கவிடாமல் பாஜகவுக்கு ஒதுக்கினார் அமைச்சர் வேலுமணி. வேலுச்சாமியின் சொந்த ஊர் சூலூர் என்பதால், தானே வேட்பாளர் என்கிற நம்பிக்கையில் இருந்தார் வேலுசாமி. 

சென்னைக்கு போய் இபிஎஸிடமும், ஓபிஎஸிடம் சூலூர் தொகுதிக்கு சீட் கேட்டார் வேலுச்சாமி. அதையும் கிடைக்கவிடாமல் செய்து விட்டார் அமைச்சர் வேலுமணி. இனிமேலும் அதிமுகவை நம்பி இருக்கக்கூடாது என உணர்ந்து கொண்ட வேலுசாமி, எடப்பாடியிடம் நேரடியாக, “இந்தக் கட்சிக்காக எவ்வளவோ பாடுபட்டிருக்கேன், ஜெயிலுக்குப் போயிருக்கேன். கட்சியில படிப்படியா முன்னுக்கு வந்தவன். எனக்கு சீட் கொடுக்கக் கூடாது’னு யார் சொன்னாலும் கேட்பீங்களா? என்னை கேவலப்படுத்தணும்னு முடிவு பண்ணிட்டீங்க. 

நான் இப்ப கிளம்பிப் போறேன். நான் போனதும் என்னை சமாதானப்படுத்தணும்னு நினைச்சு, சூலூர் வேட்பாளரா என்னை அறிவிச்சீங்கன்னா, நான் வேட்பாளர் இல்லைன்னு பத்திரிகைகாரங்களை கூப்பிட்டு சொல்லிருவேன். அப்புறம் நீங்க ரெண்டு பேரும் அசிங்கப்பட வேண்டியிருக்கும்''’ என சரவெடியாய் வெடித்ததும், அருகில் இருந்த ஓ.பி.எஸ். கிறுகிறுத்துப் போயிருக்கிறார். இப்போது செ.ம.வேலுச்சாமியிடம் அவரது ஆதரவாளர்கள், "டி.டி.வி.தினகரன் பக்கம் போகவேண்டாம். அவர் சரிப்பட்டு வரமாட்டார், அதனால் திமுகவுக்குப் போய் விடலாம்'' என நாதஸ்வரம் வாசித்து வருகிறார்களாம்.