மக்களவை தேர்தலில் கூட்டணி தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, மோகன்ராஜ் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

மக்களவை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்த குழப்பம் இன்னும் தேமுதிகவில் நீடித்து வருகிறது. இந்த கூட்டத்தில் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, மோகன்ராஜ் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே அதிமுகவிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்பும் உடன்பாடு ஏற்படவில்லை. 

இந்நிலையில் நேற்று நள்ளிரவு வரை பியூஸ் கோயல் மற்றும் அதிமுக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. கூட்டணி குறித்து தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால், அடுத்தகட்டமாக என்ன செய்வதென்று தேமுதிகவினர் திகைத்து வருகிறார்கள். இதனிடையே கூட்டணி தொடர்பாக தேமுதிகவினர் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார். மேலும் திமுகவில் புதிய கட்சியை சேர்ப்பதற்கு இடமில்லை என்று அவர் கைவிரித்துவிட்டார். 

இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உயர்மட்டக்குழு அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆலோசனையில் அதிமுக கொடுக்கும் 4 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் தொகுதிகளை வாங்கிக்கொண்டு தேர்தலில் போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து கூட்டணி உடன்பாடு இன்று அல்லது நாளை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.