இன்று சென்னையில் நடைபெறும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தங்கள் பலத்தைக் காட்ட ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தயாராகி வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்தார். எடப்பாடியில் இந்த செயல் ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சி விவகாரம் குறித்து கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசிக்காமல் எதற்காக எடப்பாடி தனது வீட்டில் வைத்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பு எரிச்சலில் இருந்தது.

 

இந்த நிலையில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை என்று பற்ற வைத்தார் ராஜன் செல்லப்பா. இதன் பின்னணியில் ஓ பன்னீர்செல்வம் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் பெரம்பலூர் எம்எல்ஏ குன்னம் ராஜேந்திரன் ஓ பன்னீர்செல்வம் குடும்ப அரசியல் செய்வதாகவும் குடும்ப அரசியல் செய்பவர்களுக்கு சசிகலாவிற்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்று மறைமுகமாக கூறி அதிர வைத்தார். 

அதாவது ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் ஆதரவாக இரண்டு எம்எல்ஏக்கள் மாறி மாறி பேட்டி அளித்தனர். நிலைமை கையை மீறிச் செல்வதால் உடனடியாக அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என்று கூட்டியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்கள் எம்பிக்கள் மற்றும் அதிமுகவின் உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்றால் அது ஓபிஎஸ் அல்லது இபிஎஸ் என்றாகிவிட்டது. தினகரனால் அதிமுக வாக்கு வங்கியை கைப்பற்ற முடியவில்லை. இதனால் அதிமுகவில் அதிகாரம் பொருந்திய நபர் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளனர். இந்த சூழலில் இன்று மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெற உள்ளதால் ஒற்றை தலைமை குறித்தும் பொதுக்குழுவை கூட்டுவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. 

எனவே இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்கள் பலத்தை காட்ட தங்கள் ஆதரவு நிர்வாகிகளுக்கு சிக்னல் கொடுத்து வைத்துள்ளதாகவும் கூட்டத்தில் அனல் பறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.