மக்களவை தேர்தலுக்கு பிறகு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுக்கு இணைந்துவிடுவார் என்று டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

மக்களவை தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணி அமைத்துவிட்டது. அதிமுக கூட்டணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. தனி அணி அமைத்து போட்டியிடுகிறது. எஸ்.டி.பி.ஐ. கட்சி இந்த கூட்டணியில் இணைந்துள்ளது. மேலும் ஒரு கட்சி இந்த கூட்டணியில் சேரும் என்று கூறப்படுகிறது.

  

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த டிடிவி தினகரன் ஜெயலலிதாவிற்கு எதிரானவர்களுடன் கூட்டணி வைக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களும், தொண்டர்களும் எங்களுடன் உள்ளனர். நாங்கள் 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம். கூட்டணிக்கு 2 போக 38 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இனி கூட்டணிக்கு வரும் கட்சிகளின் ஆதரவை ஏற்றுக்கொள்வோமே தவிர, அவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யமாட்டோம் என்றார். 

இடைத்தேர்தல் வந்தால் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிமுகவின் ஒரு பிரிவுதான் அமமுக, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை கட்சியின் பெயரை எப்படி பதிவு செய்ய முடியும். அதிமுக மீதான உரிமைக்காக போராடும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் கட்சியை பதிவு செய்யவில்லை. குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற நிலையில் அந்த சின்னத்தை கேட்பதில் தவறில்லை. குக்கர் சின்னம் தமிழகம் முழுவதிலும் சென்று சேர்ந்துள்ளது. 

ஒரு பேருந்தில் ஏறி மறுபேருந்தில் வருபவர்களுக்கு இங்கு இடம் இல்லை. எங்கள் கட்சியில் இருந்து வேறு கட்சிகளுக்கு போனவர்களைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. என்னிடம் இருந்தபோது அவர் எப்படி மரியாதையாக இருந்தார். ஆனால் அவரின் நிலைமையை பார்த்தால் பாவமாக உள்ளது. மேலும் தி.மு.க ஒரு பயில்வான்கூட்டணி. பா.ம.க. மானங்கெட்ட கூட்டணி என விமர்சனம் செய்தார்.

நாங்கள் சிறிய கட்சி என்றாலும் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு அத்தியாயம் படைப்போம். மக்களவை தேர்தல் முடிவு வந்ததும் அதிமுகவில் இருந்து துணை ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைந்துவிடுவாம். மேலும் தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக பிரதமர் மோடி இருந்து வருகிறார் என விமர்சனம்  செய்துள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிட எங்கள் கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தினகரன் கூறியுள்ளார்.