கடந்த 3 நாட்களாக தேனியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று பிற்பகலில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை புறப்படுகிறார்.

முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே உச்சக்கட்ட 
பனிப்போர் நிலவி வருகிறது. இதனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி நடந்த அக்கட்சியின் செயற்குழுவில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அக்டோபர் 7ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தங்களது ஆதரவாளர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர். மேலும், துணை முதலவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும், தேசிய கொடியை கழற்றி வைத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில், திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓ.பன்னீர்செல்வம் தேனிக்கு புறப்பட்டார். பின்னர், தனது ஆதரவாளர்களுடன் கடந்த 2 நாட்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பை ஏற்று சென்னை திரும்ப ஓ.பன்னீர்செல்வம் மறுப்பதாகவும், அடுத்த 3 நாட்களுக்கு பெரியகுளத்திலேயே இருக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகின. இதனால், அதிமுகவில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டது. 

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் 75 நகரும் நியாய விலைக்கடைகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். கூட்டுறவு மூலம் 178 பயனாளிகளுக்கு சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் இன்று பிற்பகலில் சென்னை திரும்புவதாக தகவல் தெரிவித்துள்ளார்.