தேர்தல் நடத்தை விதிகளை மீறினார் முதல்வர் ஸ்டாலின்..? தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் அளித்த அதிமுக
ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின் போது மகளிர்களுக்கான மாதந்திர உரிமை தொகைக்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிகளை முதல்வர் மீறி விட்டதாக அதிமுக சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'தேர்தல் விதிமுறைகள் மீறினார் முதல்வர்'
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் போது காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பட்ஜெட்டில் பெண்களுக்கான மாதந்தோறும் ஆயிரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என பேசி இருந்தார். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு ஏற்கனவே அதிமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தை பற்றி தான் முதலமைச்சர் விளக்கம் அளித்ததாக தமிழக அரசு சார்பாக கூறப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்
இந்தநிலையில் தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பாக தேர்தல் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் இன்பதுரை புகார் அளித்துள்ளார். அதில், தமிழக முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அறிவிப்பு வெளிட்டதாக தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்ததாக தெரிவித்ததாக கூறியுள்ளார். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். எனவே தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம், வாக்காளர்களை அழைத்துச் சென்று அடைத்து வைத்தல், உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகளில் திமுக ஈடுபட்டதாகவும் இன்பதுரை தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்