அ.தி.மு.கவுடன் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நெருங்கி வருவதாக கூறி தி.மு.க கூட்டணிக்குள் குண்டு வீசியுள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். கடந்த ஒரு மாத காலமாகவே அ.தி.மு.க மிகத் தீவிரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தி.மு.கவின் இமேஜை டேமேஜ் செய்ய வேண்டும், தி.மு.க கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது தான் தற்போதைக்கு அ.தி.மு.க தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க். 

இதனை புரிந்து கொண்டு ஈ.பி.எஸ் முதல் ஜெயக்குமார் வரை ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நாளும் புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அப்போது தமிழக அரசு சார்பில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அழைப்பிதழ் கொடுத்தால் நிச்சயமாக கலந்து கொள்வேன் என்று திருமாவளவன்கூறியிருந்தார். வழக்கமாகவும், எதேச்சையுமாகவே திருமாவளவன் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

ஆனால் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேச்சை அரசியல் ஆக்கினார். அதுவும் நாங்கள் அழைக்காமலேயே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிலி பங்கேற்க தயார் என்று திருமாவளவன் கூறியதற்கு மிக்க நன்றி என்று தெரிவித்தார். மேலும் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் கொடுக்குமாறு விழா ஏற்பாட்டாளர்களை கேட்டுக் கொள்ள உள்ளதாகவும் ஜெயக்குமார்  கூறினார். 

அதுமட்டும் இன்றி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதாக திருமாவளவன் கூறியது மூலம் அவர் எங்களுடன் நெருங்கி வருவது உறுதியாகியுள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார். திருமாவளவனின் எதேச்சையான பேச்சை கூட தி.மு.க கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான ஒரு அணுகுண்டாக ஜெயக்கமார் பயன்படுத்தியுள்ளதாகவே அரசியல்நோக்கர்கள் கருதுகின்றனர்.