ஓபிஎஸ், இபிஎஸ் அணி பிரிந்து இருந்தபோது, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியில் இருந்தவர் வின்சென்ட். இபிஎஸ் ஆதரவாளராக இருந்தவர் முனியசாமி. எலியும் பூனையுமாத்தான் இருந்தார்கள். இணைப்புக்கு பிறகு ஓபிஎஸ் மூலம் வின்சென்ட் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பதவியை பெற்றார். 

இப்போது அதிமுக மாவட்டச் செயலாளராக முனியசாமி இருக்கிறார். ஆனால் அரசு திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை பெறுவதற்கு மாவட்ட செயலாளரை பார்க்க தேவையில்லை. இளைஞரணி செயலாளரை பார்த்தால் போதும். அதுமட்டுமல்ல... அதிமுக நிர்வாகிகள் பலரை கூட இவர்தான் டீல் செய்கிறாராம். நகராட்சி ஒப்பந்தம் முதல் கஜா புயலுக்கு நிதி திரட்டுவது வரை மாவட்ட செயலாளரை மிஞ்சும் நிலையில் கட்சி நிர்வாகிகளை, இளைஞரணி செயலாளர் மிரட்டி, அடக்கி, உருட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. 

இளைஞரணி செயலாளருக்கு ஏன் மாவட்ட செயலாளர் மடங்கிப்போக வேண்டும்? என ராமதாபுரம் மாவட்ட ரத்தத்தின் ரத்தங்களிடம் விசாரித்தால்...’’மாவட்ட செயலாளர் பற்றிய அந்தரங்க விஷயங்களை, இளைஞரணி செயலாளர் அறிந்து வைத்திருக்கிறார். அதனால், அவர் அடிபணிந்து போகிறார். நாளுக்கு நாள் இளைஞரணி செயலாளரின் டார்ச்சர் அதிகரித்திருப்பதால், மாவட்ட செயலாளர் அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் வேறு கட்சி பக்கம் தாவும் நிலைக்கு தயாராக இருக்கிறார்கள்’ என்கின்றனர்.