தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அ.ம.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக சசிகலா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.கவில் இருந்து ஒதுக்கப்பட்ட பிறகு தங்களுக்கு என்று ஒரு அமைப்பு இருந்தால் தான் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கூட்டுறவு சங்க தேர்தலில் ஆதரவாளர்களை தக்க வைக்க முடியும் என்று சசிகலாவிடம் கூறி அ.ம.மு.கவை ஆரம்பித்தார் தினகரன். ஆனால் அ.தி.மு.கவில் அதிருப்தியில் இருந்த பல்வேறு நிர்வாகிகளும், இளைஞர்களும் அ.ம.மு.கவில் சாரைசாரையாக இணைந்தனர்.

 

செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டத்தை திரட்ட முடிவதுடன் அ.ம.மு.க சார்பில் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் பல நிர்வாகிகள் முண்டி அடித்த காரணத்தினால் ஒரு கட்டத்தில் அ.தி.மு.க என்கிற கட்சியையை மறந்துவிட்டு அ.ம.மு.கவில் தீவிரமாக இயங்க ஆரம்பித்தார் தினகரன். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.கவின் நிர்வாகிகளாக மதுசூதனன், எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்சை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. 

இந்த அறிவிக்கையின் மூலம் அ.தி.மு.க என்றால் இனி மதுசூதனன், எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் என்றானது. இந்த அறிவிக்கை குறித்த தகவல் அறிந்த சசிகலா உடனடியாக தினகரனை அழைத்து விளக்கம் கேட்டுள்ளார். அப்போது அது ஒரு விஷயமல்ல டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் நிச்சயமாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அ.தி.மு.கவை நம் வசப்படுத்திவிடலாம் என்று சசிகலாவிடம் விளக்கம் அளித்திருந்தார் தினகரன். ஆனால் அதன் பிறகும் அ.தி.மு.கவை மீட்பதில் தினகரனுக்கு பெரிய அளவில் ஆர்வம் இல்லை. அ.ம.மு.கவை வலுப்படுத்தவே அவர் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். 

இந்த நிலையில்அண்மையில் டெல்லியில் அ.தி.மு.கவிற்கு உரிமை கோரி சசிகலா சரப்பு தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.கவின் ஒரு அங்கம் தான் அ.ம.மு.க என்று தினகரன் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் வாதங்களை எடுத்து வைத்துள்ளார். இந்த வாதம் தான் பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் இது போன்ற ஒரு குழப்பமான வாதம் வழக்கில் நிச்சயமாக சசிகலா தரப்புக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுத்தராது என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள். இது குறித்த தகவல் அறிந்த பிறகு தான் சசிகலா தினகரனிடம் கோபப்பட்டுள்ளார். அ.தி.மு.கவை கைவிட்டு விட்டு அ.ம.மு.கவை நீண்ட நாட்களுக்கு நடத்த முடியாது. 

ஒரே தேர்தலில் அ.ம.மு.க காணாமல் போய்விடும், நிர்வாகிகள் நொடிப் பொழுதில் மாற்றுக் கட்சிகளுக்கு சென்றுவிடுவார்கள் என்று தினகரனிடம் சசிகலா சிறிது காட்டமாகவே கூறியுள்ளார். மேலும் அ.தி.மு.கவை மீட்டுத்தரவில்லை என்றால் அ.ம.மு.க பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவும் தயங்கப்போவதில்லை என்கிற ரீதியில் சசிகலா பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அ.ம.மு.கவா – அ.தி.மு.கவா என்கிற குழப்பம் தினகரனுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.