விவசாயிகளுக்காக காங்கிரஸ் யாத்திரை, வெறுப்பு அரசியலை பரப்ப பாஜக யாத்திரை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். 

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கும் வேல்யாத்திரை டிசம்பர் 6-ம் தேதி , திருச்செந்தூரில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்கு  விசாரணையின் போது பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது. மேலும் கொரோனாவுக்கான 2, 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக  தெரிவித்துவிட்டது. வேல் யாத்திரைக்கு அனுமதி கோரும் பாஜக மனு மீது தமிழக அரசு எடுக்கும் முடிவை பொறுத்து வழக்குகளை தொடரலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். 

இது  தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்;- வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததன் மூலம் அதிமுக- பாஜக அரசியல் உறவு இணக்கமாக இல்லை என்பது தெரிகிறது. பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மருத்துள்ளதை வரவேற்கிறேன். 

காங்கிரசின் யாத்திரைக்கும் பாஜகவின் யாத்திரைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. விவசாயிகளுக்காக காங்கிரஸ் யாத்திரை நடத்துகிறது.  வெறுப்பு அரசியலை பரப்ப பாஜக யாத்திரை நடத்த முயற்சிக்கிறது. ஏதோ ஒரு அழுத்தத்தின் விளைவாக மனுஸ்மிருதி நூல் புழக்கத்தில் இல்லை கமல்ஹாசன் கூறியுள்ளார்.