அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2019 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக உடன்பாடு செய்து கொண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னையில், கிரவுன் பிளாசா ஹோட்டலில் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, பாஜக சார்பில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன், வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். 

இன்று காலை அதிமுக பா.ம.க. இடையே கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், தற்போது அதிமுக பாஜக இடையே கூட்டணியில் பேச்சுவார்த்தை 3 மணிக்கே நிறைவு பெற்றது. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் ராகு காலம் என்பதால் தாமதமாக அறிவிப்பு வெளியானது. இதில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தொகுதிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இது பாமகவை விட இரண்டு தொகுதிகள் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக மற்றும் இதர கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளை இன்னும் அதிமுக அறிவிக்கவில்லை.