கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து கூடுதல் தொகுதிகளைக் கேட்டு வந்த பாஜகவுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கி, அதன் கூட்டணி கட்சிகளை அதிமுக தங்கள் பக்கம் வளைத்துவிட்டது.

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் உறுதியாக இருந்த பாஜக, தொடக்கம் முதலே 10 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு வந்தது. தங்களுக்கு 7 தொகுதிகளையும் தங்களோடு கூட்டணியில் உள்ள பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், கிருஷ்ணசாமி ஆகியோருக்கு சேர்த்தும் தொகுதிகளைக் கேட்டது. இதில் பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், தற்போது திமுக கூட்டணியில் உள்ள ஈ.ஈஸ்வரன் ஆகியோர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு எல்லா தொகுதிகளிலும் சுமார் இரண்டரை லட்சம் ஓட்டுகளைப் பெற்றார்கள். 

இதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பாரிவேந்தர் (பெரம்பலூர்), ஏ.சி.சண்முகம் (வேலூர்), கிருஷ்ணசாமி (தென்காசி) ஆகியோரை தாமரை சின்னத்தில் நிற்க வைக்க பாஜக முடிவு செய்திருந்தது. இதன்மூலம் தமிழகத்தில் 8 முதல் 9 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் வாய்ப்பை உருவாக்கி வைத்திருந்தார்கள். ஆனால், மூவருக்கும் தொகுதிகளை ஒதுக்க சம்மதம் தெரிவித்த அதிமுக, அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடட்டும் என்று பாஜகவிடம் கறாரகப் பேசி சம்மதிக்க வைத்துவிட்டது. 

இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட பாரிவேந்தர், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து, கூட்டணியை உறுதி செய்துகொண்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஏ.சி. சண்முகமும் கிருஷ்ணசாமியும் தங்களது முடிவை ஓரிரு நாட்களில்  தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன்மூலம் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உதிரி கட்சிகளை இரட்டை இலை சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட வைத்ததுபோல, நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க உள்ளனர். அதுவும் பாஜக கூட்டணி கட்சிகளை அதிமுக கூட்டணி கட்சிகளாக ஓபிஎஸ் - இபிஎஸ் மாற்றிவிட்டனர் என்று இவர்களுடைய சாணக்கியதனத்தை அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் பேசிப்பேசி சிலாகிக்கின்றனர்.